பணக்கார வீட்டு நாய்

 பணக்கார வீட்டு நாய் 

"என்ன சகுந்தலா சுகமா. வா வா .. உன்னை பார்த்து எத்தனை நாள் ஆச்சு?"

கதவை திறந்து சகுந்தலாவை பார்த்தவுடன் அவள் திடீர் வரவால் மேலிட்ட அதிர்ச்சியுடன் கலா கேட்டாள் . அவளும் சகுந்தலாவும் பள்ளிக் காலம் தொட்டு தோழிகள். 

மனிதரின் ஆறாவது விரலாக செல்பேசி ஆகி விட்ட இந்த நாளில் சொல்லாமல் திடீரென வீட்டுக்கு வருவது மிக குறைவு தானே. அந்த வியப்புடன் பார்த்தவள், "சரி சரி உள்ளே வா" என்று தோழியை உள்ளே அழைத்து சென்றாள். 

சோபாவில் அமர வைத்து விட்டு, தண்ணீர் தந்தாள் கலா, "இரு காபி கொண்டு வர்றேன்" என்று சொல்லி உள்ளே சென்றாள் .

சில நிமிடங்களில் வெளியே வந்த கலாவிடம், "என்னம்மா.. சமையல் மணம் கமகமக்குது.  எதுவும் விசேஷமா? " என்று கேட்டாள் சகுந்தலா. 

"இன்னிக்கு மாமியார் மாமனார்  வருவதாக சொன்னாங்க. அதான் அவங்களுக்கும் சேர்த்து சமைச்சு வைத்திருக்கிறேன். வருகிற நேரம் தான். உட்கார். நல்ல நாளாக தான் வந்திருக்க. நீயும் சாப்பிட்டு விட்டே போ", என்றாள்.  "அதெல்லாம் என்ன சொல்ல வேண்டுமா? அந்த திட்டத்தோடு தான் வந்துள்ளேன்" என்று உரிமையோடு சகுந்தலா சொன்ன பதிலை கலா ரசித்தாள். 

இருவரும் ஒன்றாம் வகுப்பு கதை துவங்கி, ஐந்தாம் வகுப்பு கதைக்கு வரும் நேரத்தில் கலாவின் மாமியார் குரல் வாசலில் கேட்டது. 

"என்ன கலா. எப்படி இருக்கிறாய்? " என்று புன்னகையுடன் கேட்டபடி உள்ளே வந்தவர்களை பார்த்து , கலா எழுந்து நின்று உள்ளே வந்தவர்களை வரவேற்றாள். 

"வாங்க மாமா. வாங்க அத்தை." என்று அவர்களை வரவேற்றவள், மெல்ல குனிந்து உடன் வந்த நாயைப் பார்த்து, "வாடா குட்டி பையா. சத்ருக்-குட்டி... நீ எப்படி இருக்க" என்று கேட்க அது அவளை பார்த்த உவப்பில் வாலை ஆட்டி மெல்ல குரைத்தது.

Photo by Robert Larsson on Unsplash

அப்போது தான் சகுந்தலாவை கவனித்த கலாவின் மாமியார், "அட நீ வேற வந்திருக்கியா. உன்னை பார்த்து எத்தனை நாள் ஆச்சு. எப்படி இருக்கம்மா" என்று வாஞ்சையுடன் கேட்டாள் . "நான் நல்ல இருக்கேன் அம்மா" என்று பதிலளித்தாள் சகுந்தலா. 

"இதோ காபி கொண்டு வர்றேன் அத்தை. ரெண்டு நிமிஷம்" என்று உள்ளே சென்று  சில நொடிகளில் காபியோடும் பலகாரத்தோடும் வந்த கலாவிடம், "லக்ஷ்மணன் எங்கம்மா" என்று கலாவின் கணவர் பற்றி கேட்க , "அவர் பக்கதது கடை வரைக்கும் தான் போயிருக்கார். இப்போ வந்து விடுவார். " என்று பதிலளித்தோடு நில்லாமல் உடனே செல்பேசியில் அவனை அழைத்தாள் . அவன் எடுக்கவில்லை. 

அடுத்த அரை மணி நேரத்தில் இரண்டு முறை அழைத்தும் பதில் வராமல் போகவே , "அத்தை. தெரு கோடியில் இருக்கும் சூப்பர் மார்கெட்டுக்கு தான் சென்றார். நான் போய்  அழைத்து வந்து விடுகிறேன்" என்றபடி கலா வெளியே சென்றாள்.

* * * * * 

கலாவின் மாமனார் படுக்கை அறையில் சென்று படுத்து விட, கூடவே சத்ருக்கனன் என்ற அந்த சத்ருக்-கும் சென்றது. ராமன் , பரதன் , லக்ஷ்மணன் என்ற மூன்று மூத்த பிள்ளைகள் பிறந்த பின்னர் வீட்டிற்கு வந்த நாய்க்குட்டி (அப்படி சொன்னால் அவர்களுக்கு கோவம் வரும்) என்பதால் அவனுக்கு சத்ருக்கனன் என்று பெயர். 

ஏற்கெனவே பழகி இருந்ததால் கலாவின் மாமியாரும், சகுந்தலாவும் வேறுபாடின்றி பேசிக் கொண்டனர். பரஸ்பர நல விசாரிப்புகளுக்குப் பின்பேச்சு சகுந்தலாவின் குடித்தனம் பற்றி திரும்பியது. 

"உங்க மாமியார் மாமனார் எல்லாம் நல்லா இருக்கங்களாம்மா?", கேட்டார் கலாவின் மாமியார்.

"எல்லாம் சுகம் தான். அவங்க கோவையில இருப்பதால் அவ்வப்பொழுது தான் பார்க்க முடிகிறது. அந்த வருத்தம் தான். அவங்க கூடவே இருந்தா அவங்களுக்கும் நல்லா இருக்கும். ஆனா என்ன செய்ய ..பிழைப்பு இங்கே என்று ஆகி விட்டதே. "

"அதுவும் சரி தான். " என்றவர் கொஞ்சம் யோசித்து விட்டு, "இங்க எங்க.. நாங்க இதே ஊருல தான் இருக்கோம். லக்ஷ்மணனுக்கும் ஒண்ணா இருக்க தான் விருப்பம். உன் தோழி அடமா அடம் பிடிச்சு, தனி குடித்தனம் வேணும்னு வந்துட்டா. இத்தனைக்கும் என்னோடவோ, மத்தவங்களோடவோ பிரச்சனை ஒன்றும் கிடையாது. என்னை அவங்க அம்மாவை விட நல்லா தான் பாத்துப்பா. நானும் அப்படி தான். ", என்றவர் பேச்சில் பையனோடு ஒரே வீட்டில் ஒன்றாக இல்லாத சோகம் தெளிவாக தெரிந்தது. 

"அவனும் எனக்கு கடைசியா  பிறந்தவன். பயங்கர செல்லம். ஒரு சின்ன வேலை கூட வாங்குனது இல்லை.படிக்க வெளியூர் போகிறேன் என்று சொன்னவனை பிரிந்திருக்க மனமின்றி நான் இங்கேயே படிக்க சொல்லி விட்டேன் "

"என்னவோ போம்மா. கலாவும் என் பொண்ணு தானே. என் பொண்ணு சொல்லி இருந்தா நான் விட்டிருக்க மாட்டேனா. அதான் அவள் ஆசைப்படி இருக்கட்டும் என்று தனி குடித்தனம் போக சொல்லி விட்டு, அவ்வப்பொழுது வந்து போய் கொண்டு இருக்கிறேன். எப்போ வேணும்னா திரும்ப வாஎன்று சொல்லி தான் அனுப்பினேன். அவன் அண்ணன்களுக்கும் அவன் கூட இருக்க வேண்டும் என்று தான் ஆசை. ஆனா என்னவோ இவளுக்கு தனியா இருக்க விருப்பம். அதனால் எல்லோரும் விட்டு விட்டோம். பக்கத்துலயே தான் இருக்கான். என்ன இருந்தாலும் அவன் கூடவே இருந்தாப்போல வருமா" என்று சொல்லி வருந்தியவரை என்ன சொல்லி தேற்ற என்று தெரியாமல் சகுந்தலா விழித்த நேரம், கலாவும் லக்ஷ்மணனும் வாங்கிய சாமான்களோடு வீட்டிற்கு வந்தனர். 

பேசிய விஷயத்தை அப்படியே நிறுத்தி விட்டு எழுந்த கலாவின் மாமியார், தன் மகனை நோக்கி ஓடினார். புடவையை எடுத்து அவன் வியர்வையைத் துடைத்த படி, "என்னடா. இப்படி வியர்த்து இருக்கு. வா. வந்து உட்கார். " என்று அவனை அணைத்தபடி அமர வைத்து விட்டு, ஓடிப் போய் மினிவிசிறியை ஓட விட்டார்.  

"இதோ காபி எடுத்துட்டு வர்றேன்" என்றபடி சமையலறை நோக்கி ஓடினார். அதற்குள் மாமனாரும் வந்து விட, அனைவரும் பேசி சிரித்தபடி மதிய உணவு உண்டனர். சத்ருக்-க்கும் தவறாமல் ஒரு தட்டில் அவனுக்கான உணவை வைத்து விட்டனர். சிறிது நேரத்தில் சகுந்தலா கிளம்ப, மாலை வரை இருந்து விட்டு மாமனாரும் மாமியாரும் கிளம்பினார். 

"எப்போ வீட்டுக்கு வந்துடலாம் என்று தோணினாலும் வந்துடும்மா.. யோசிக்காத கண்ணா சரியா" என்று எப்போதும் சொல்லும் அதே வரியை , அன்றும் சொல்ல கலாவின் மாமியார் தவறவில்லை. 

* * * * * 

அடுத்த சில நாட்கள் இயல்பு வாழ்க்கை நகர, இன்னொரு நாள் கோவிலில் கலாவை பார்த்தாள் சகுந்தலா. 

பரஸ்பர விசாரிப்புக்கு பின் சகுந்தலா கேட்டாள், "ஆமா . ஏனடி ..எனக்கு தான் புருசனுக்கு வெளியூரில் வேலை. தனிக் குடித்தனம் இருந்து அல்லல் படுகிறேன். உனக்கு உள்ளூரிலேயே நல்ல மாமியார்  , மாமனார். நல்ல குடும்பம். அப்புறம் ஏன் தனிக் குடித்தனம். நீயும் வேலை செய்து கொண்டே வீட்டையும் பார்க்க கஷ்டம் தானே படுகிறாய்.  அவர்கள் வீட்டிலேயே இருந்தால் என்ன. உனக்கும் வசதி தானே. உன் மாமியாரும் வருத்தப்பட்டார், பையன் கூட இல்லையே என"

கலா  பதிலளித்தாள், " நீ அவங்க வீட்டு சத்ருக்-கை பார்த்திருக்கிறாயா?"

"அந்த நாய் தானே.. அன்று உன் வீட்டிற்கு வந்து இருந்ததே"

"ஐயோ. அதை நாய் என்று சொன்னாலே அவர்களுக்குக் கோவம் வரும். அது அவர்களின் பிள்ளை போல தான். நாய் என்று பெயரே தவிர அதற்கு தின்னுவதும், தூங்குவதும் தவிர பெரிதாக ஒன்றும் தெரியாது. எதுவும் விளையாடாது. மோப்பம்  பிடிக்காது. மடியில் வைத்து கொஞ்சினால் சந்தோஷமாக நக்கும். மற்றபடி, உணவை தட்டில் வைக்காமல் வேறு எங்காவது வைத்தால் தின்ன கூட தெரியாது. ஒரு வேளை அது தானே இரை தேடும் நிலை வந்தால் அது ஓரிரு நாளில் இறந்தாலும் இறந்து விடும். அவ்வளவு கெடுத்து வைத்து இருக்கிறார்கள். "

"அது எல்லாம் இருக்கட்டும்டீ...நான் என்ன கேட்டேன். நீ என்ன சொல்ற.. உன் புருஷன் வீட்டுல கூட நீ இருக்கறதுக்கும் . நாய் பத்தி நீ பேசுறதுக்கும் என்ன தொடர்பு" குழப்பத்தோடும் , மெல்லிய கோவத்தோடும் கேட்டாள் சகுந்தலா. 

"அதில்ல டீ. இவரும்  கிட்டத்தட்ட அது மாதிரி தான். வீட்டிற்க்கு பயங்கர செல்லப் பிள்ளை. வெளியில் போனால் ஒரு விஷயம் தெரியாது. ரேஷன் முதல் லைசன்ஸ் வரை யாராவது உடன் வர வேண்டும். இல்லையெனில் அவருக்கு செய்யத் தெரியாது. வீட்டில் அனைவருக்கும் மிக செல்லம். அது அவர் விருப்பப்படுவதை அவர்கள்  செய்வதோடு சரி. "

வெறிக்க நோக்கிய சகுந்தலாவை நோக்கி தொடர்ந்தாள் கலா, "வீட்டில் எந்த பிரச்சனைக்கும் இவரை கருத்து எல்லாம் கேட்க மாட்டார்கள். இவருக்கும் யோசித்து சொல்லத் தெரியாது. வெளி உலகம் தெரிந்தால் தானே. செல்ல பிள்ளையாகவே வளர்ந்த அவருக்கு இது பெரியதாக தெரியவில்லை. சுருங்க சொன்னால் அவருக்கு வீட்டில் அன்பு நிறைய உண்டு. அனால் மரியாதை???  ஒரு சிறிய இடைவேளை விட்டு தொடர்ந்தாள். 

"அது கேட்டு பெறும் விஷயம் அல்ல. நம் நடத்தையில்  தானாக வர வேண்டும். அதற்கு அவருக்கு வெளி உலகம் தெரிய வேண்டும். அங்கே இருக்கும் வரையில் அது கடைசி வரை நடக்காது. அதனால் தான் கொஞ்சம் தள்ளி இருக்கிறேன். இன்னும் சில ஆண்டுகள் தான். மாமனார் மாமியாருக்கு தள்ளாமை துவங்கும் நேரம் அங்கு மீண்டும் சென்று விடும் எண்ணத்திலே தான் இருக்கிறேன். இப்போது கிடைக்கும் நேரத்தில் தானே அவரும் வளர வேண்டும். " என்றபடி ஒரு சிறிய இடைவெளி விட்டு , "அப்போது தானே தன் தகப்பன் விவரமானவன் என்று பிறக்க போகிற எங்கள் பிள்ளையும் சொல்ல முடியும் " , மெல்லிய வெட்கத்துடன் கலா சொல்ல, சகுந்தலா, "ஹேய்ய்.. வாழ்த்துக்கள்" என குதூகலித்தாள் . அவர்கள் மகிழ்ச்சி கண்டு தெருவோரத்தில் இருந்த ஒரு நாயும் மெல்ல மகிழ்ச்சியாகக்  குரைத்தது. 


* * * * * 

Comments