யானைப் பாகன்

65 வயது ஆகி விட்டது தான். இருந்தாலும் இது அதிர்ச்சி.


நேற்று வரை ஓய்வின்றி வீடு முழுக்க சுற்றிச் சுற்றி வந்து

எல்லோருக்கானதையும் செய்து கொண்டிருந்த ருக்மணி இத்தனை சீக்கிரம்

கட்டையைக் கிடத்துவாள் என்று யார் எதிர்பார்த்திருக்க முடியும்..


ராமன் -ருக்மணி தம்பதி. அந்த நாளிலே ஏறக்குறைய 25 வயதிற்குள் திருமணம்

ஆகி, கிருஷ்ணன், கேசவன் என இரு மகன்களோடும், அவர்களுடைய மனைவியரோடும் ஒரே

வீட்டில் கூட்டுக்குடும்பமாக இன்றும் வாழ்ந்து வந்தனர்.


மற்றவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் சமாதானம் ஆகி விட, மிகவும்

இடிந்து போனது ராமன் தான். பார்க்கும் இடம், செய்யும் செயல் என

ஒவ்வொன்றும் அவருக்கு ருக்மணியை எதோ ஒரு விதத்தில் நினைவு படுத்திக்

கொண்டே இருந்தன. புத்திர சோகம் தான் உலகில் மிகக் கொடியது என்று சொல்லிக்

கேள்விப்பட்டு இருக்கிறார். அவருக்கு என்னவோ அது ஒவ்வொருவரும் பல

மனைவிகளோடு வாழ்ந்த காலத்தில் சொல்லப்பட்ட தவறான மொழியாகவே தோன்றியது.

ஒருத்தியோடு வாழ்க்கையைக் கழித்த ஒருவனுக்கு, புத்திர சோகத்தை விட

மனைவியின் மரணம் தான் பெரும்துயர் தரும் என்று அவர் எண்ணினார்.


இவ்வளவு ஏன்..!! கடந்த வெள்ளிக்கிழமை தானே அவளோடு காலையில் கோவிலுக்குச்  சென்றார்.


"லாக்டவுன் எல்லாம் முடிஞ்சு இப்போ தான் கோவில் தெறந்துருக்காங்க.. எப்போ

திடீர்னு திரும்ப மூடிடுவாங்களோ தெரியாது. அதுக்குள்ளே ஒரு நடை போய்

விட்டு வந்துடலாம்", என்ற அவள் வார்த்தையைக் கேட்டு அவர்கள் இருவரும்

அன்று காலை அருகிலிருந்த சிவன் கோவிலுக்கு சென்றார்கள்.


அவர்கள் ஊர் ஒன்றும் பெரிய நகரம் எல்லாம் இல்லை. கிராமத்தில் கொஞ்சம்

பெரியது என்று மட்டுமே சொல்லலாம். அளவிலும் வசதியிலும் மிக பெரியது என்று

இல்லாவிட்டாலும், இதை விட பெரிய பல கோவில்களுக்கு இல்லாத சிறப்பாக

கோவிலில் சொந்தமாக ஒரு யானை அன்றளவும் இருந்து வந்தது

அவ்வூர்க்காரர்களுக்கு தனிப் பெருமை.


அன்றும் அப்படித்தான். ராமனும் ருக்மணியும் சென்ற நேரம், கோவில்

வாசலிலேயே கோபுரத்தின் கீழ் நிழலில் கோவில் யானை பார்வதி அவர்களை

வரவேற்றாள்.


"ஆனாலும் நம்ம பார்வதி சமத்து  இல்ல... அவ பாட்டுக்கு இருக்கா. வீட்டுல

ஒரு பூனையை வளர்க்கவே படாத பாடு படுறாங்க சில பேரு .. இவ பாரு.. ஒரு

கலாட்டா கிடையாது. தான் பாட்டுக்கு யாரையும் தொந்தரவு செய்யாமல், சின்ன

ஆட்டம் கூட இல்லாமல்.. ச்சே.. இந்த மாதிரி வராது பாத்துக்கோ", ராமன்

பார்வதியைப் பெருமையுடன் பார்த்தபடி சொன்னார்.


"சமத்தா..?? எல்லாம் அங்கே பக்கத்துல படுத்துருக்கானே பாகன், அவனுக்கு

தான் தெரியும். சமத்து , அமைதி எல்லாம்... " என்றாள் ருக்மணி,

பார்வதிக்கு அரைத்தூக்கத்தில் இருந்த பாகனை நோக்கியபடி.


"அவன் கெடக்கான் சோம்பேறிப்பய .. பாரு.. இப்போவே தூங்கி வழியறான்.

இவனுக்கு குடுக்கற சம்பளமே வீண்.... பார்வதி அவ பாட்டுக்கு இருக்கா..

இவன் என்னத்தை கிழிக்கறான்", ராமன் பாகனை அசிரத்தையாகவும் மெல்லிய

அலட்சியத்தோடும் பார்த்தபடி சொன்னார்.


"சரி.. நீங்க முடிவு பண்ணிட்டீங்க.. இனி நான் பேசி என்ன" , மனதுக்குள்

நினைத்தவள் போல அவள் கணவனைப் பின்தொடர்ந்தாள்.


"பாவி பழிக்காரி.. நேத்து தானே கோவிலுக்குப் போயிட்டு வந்த மாதிரி

இருக்கு இப்போ யோசிச்சாலும்..இப்படி என்னை ஒண்டியாக விட்டுட்டு

போயிட்டாளே" , இரண்டு மாதங்களுக்குப் பிறகும் ராமன் புலம்பிக்

கொண்டிருந்தார்.


"யம்மா.. யமுனா கொஞ்சம் காபி தர்றியா? " , அவர் கேட்க, யமுனா கோபத்துடன்

பொரிந்து தள்ளி விட்டாள் . "இந்த வீட்டுல எனக்கு மட்டும் என்ன பத்து கையா

இருக்கு. எல்லா வேலையும் நானே தான் செய்யணுமா?? இப்போ தானே துணி

துவைச்சிக்கிட்டு இருக்கேன். இதுங்க வேற ஆன்லைன் கிளாஸ் அப்புடின்னு

படிக்காம ஆட்டம் போடுதுங்க.. இதுல இவ்ளோ சீக்கிரம் காபி வேறயா...  செல்வி

எங்க போனா அவளைக் கெட்டாலென்ன??", காபி கேட்டதற்கு எதற்கு இவ்வளவு கோவம்

என்று அவருக்கு சுத்தமாகப் புரியவில்லை.


யமுனா மட்டும் இல்லை. ருக்மணி இறந்த பின், இந்த இரண்டு மாதத்தில்

குடும்பத்தில் அனைவரிடமும் ஒரு அமைதியற்ற தன்மையும் எரிச்சலும்

இருந்துகொண்டே இருந்தது. கொஞ்சம் வெளியே செல்லலாம் என மெல்ல தெருவில்

நடக்கத் துவங்கியவர், "மூடியிருந்தாலும் பரவாயில்லை. கோவில் வாசலையாவது

பார்த்து வரலாம்" என்று எண்ணியபடி நடந்தார். கோவில் உள்ளே யானைக்

கொட்டிலில் பார்வதி ரகளை செய்யும் சத்தம் வெளியே அவருக்குக் கேட்டது.

கவலையான முகத்தோடு கோவில் வாசலில் அமர்ந்திருந்த அறங்காவலர் சீனிவாசனிடம்

கேட்டார் , "என்ன ஆச்சு பார்வதிக்கு. எந்நாளும் இல்லாம இப்படி கத்துறா.."


"அதை ஏன் சார் கேக்குறீங்க. உங்களுக்கு விஷயமே தெரியாதா.. யானையைப்

பாத்துகிட்டு இருந்த பாகன் ரமேஷ் கொரோனா வந்து மூணு நாள் முன்னாடி

செத்துட்டான். வேற பாகனும் கிடைக்கல. சின்ன ஊருன்னு யாரும் வர

மாட்டேங்குறாங்க. இப்போ பாகனோட இருந்த பையன் தான் பாத்துக்குறான். ஆனா

அவனுக்கு அவ்வளவா விஷயம் தெரியாது. "


"பார்வதி அமைதியானவ தானே...."


"அதெல்லாம் பார்வைக்குத் தான் சார். அவ எத்தனை சேட்டை பண்ணுவான்னு அந்த

பாகனுக்குத் தானே தெரியும். ரொம்ப நாள் தாங்காது. நாங்களே வேறு பெரிய

கோவில் ரெண்டுல பேசி வெச்சிட்டோம். அங்க அனுப்பிடறதாக முடிவு."


"இருந்தாலும் நம்ம ஊருல யானைன்னு ஒண்ணு ... " என்று துவங்கிய ராமனை

இடைவெட்டி சீனிவாசன் சொன்னார், "இருக்குறது பெருமை தான்.. நல்லது தான்.

ஆனா அதுக்கு பாகன்-னு ஒருத்தன் இரவும் பகலும் கஷ்டப்படணுமே.. அதுக்கு வழி

இல்லையே.. நாளைக்கு பார்வதியால யாருக்காவது பாதிப்புன்னா.. அந்த கஷ்டத்தை

வரலையேன்னு நினைத்து, இந்த வருத்தத்தைப் போக்கிக்க வேண்டியது தான் சார்.

சரி நேரமாகுது நான் வரேன்" சீனிவாசன் நகர்ந்தார்.


சீனிவாசனின் சொற்கள் ராமன் நெஞ்சில் சுரீரென உரைத்தது. ஊருக்கு அழகாக

தெரியும் யானையைக் காக்க அமைதியாக ஒரு பாகன் போராடியது போல தான் தன்

கூட்டுக் குடும்பத்தைக் காக்க, பலரையும் அமைதியாக அனுசரித்து  ருக்மணி

அத்தனை நாள் போராடியிருக்கிறாள் என அவருக்கு உரைத்தது. "சரி தான்...

பிரச்சனைகள் பெரிதாக வெடிப்பதற்குள் யானையை அனுப்பி விடுவது தான் நல்ல

முடிவு.. " நினைத்தபடி வீடு நோக்கி நடந்தார்.


அன்று இரவு இரு மகன்களை அழைத்துச்  சொன்னார், "எனக்கும் வயசாயிடுச்சு.

நீங்களும் வளர்ந்து குடும்பமாகி இருக்கீங்க. எனக்கு என்னவோ நீங்க ரெண்டு

பேரும் தனிக்குடித்தனம் போயி இருக்குறது நல்லது-ன்னு தோணுது. நானும்

என்னோட பென்ஷன் பணத்துல ஏதாவது இல்லத்துல சேந்து குறை காலத்தை

கழிச்சுக்குறேன்..இவ்வளவு பெரிய வீட்டுக்கு குடுக்குற வாடகையும்

மிஞ்சுமே... ", கனத்த இதயத்தோடு அவர் சொல்ல, "வேண்டாமே..!! இப்போ

எதற்கு..?? நீங்கள் எப்படி தனியாக".. என்று எந்த கேள்விகளும் இன்றி

அவர்கள் சம்மதித்தது அவருக்கு என்னவோ, ஏற்கெனவே அவர்கள் அதே முடிவை

எடுத்து விட்டார்களோ என்று தோன்றியது. அடுத்த இரு மாதங்களில் அவர்

பக்கத்து ஊரில் இருந்த முதியோர் இல்லத்தில் சேர்ந்த போது அங்கு ஒருவர்

கேட்டார்.. "ஓ... அந்த ஊரா.. அந்த ஊர் கோவில் யானை பிரசித்தம் ஆச்சே"


"ஆமாம்.. ஆனால் இப்போது யானை இல்லை... யானையை அனுப்பிட்டோம்.. இருந்த

பாகன் செத்துட்டான்... பாகன் இல்லாமல் யானையைப் பார்த்துக்கொள்ள

முடியவில்லை" என்றவர், மெல்ல யோசித்த பின் தனக்குள் முணுமுணுத்தார்,

"இன்னும் கொஞ்சம் முன்பே யானை வேணாம் என்று முடிவெடுத்திருந்தால்

பாகனுக்கு கொஞ்சம் ஓய்வு கிடைத்திருக்கும்.. அவன் கொடுத்து வைத்தது

அவ்வளவு தான்”




உங்களுக்கு இந்தக் கதை பிடித்திருந்தால், அடுத்து வரும் கதைகள் பற்றி அறிய : Vetti Vaayan / வெட்டி வாயன்  என்ற முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.



Comments

  1. சிறந்த கதை. எளிய வார்த்தைகள் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படி உள்ளது 👏👍

    ReplyDelete
    Replies
    1. படித்ததற்கும், பதிலளித்ததற்கும் நன்றி !!

      Delete

Post a Comment