அப்பா

அப்பா


ஞாயிற்றுக்கிழமை சற்றேறக்குறைய ஏழரை மணி.
லேசாக தூக்கம் கலைந்த நேரம்.. எழுந்து கொள்ள விருப்பமின்றி அவள் புரண்டு புரண்டு படுத்தாள். போதும் என எழ நினைத்த நேரம், அந்த குரல் கேட்டது.

"இன்னிக்கு எனக்கு வேலை இருக்கு கமலா.. அலுவலகம் போகணும். சீக்கிரம் சமைச்சு வை" , அவர் அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தது அவளுக்குக் கேட்டது.

"அப்பாடா..இன்னிக்கு அந்த ஆள் வீட்டுல இருக்க மாட்டான்.. நிம்மதி. இவன் கெளம்புற வரைக்கும் கண்ணை மூடிக்கிட்டே படுத்திருப்போம்", அவள் நினைத்துக் கொண்டு கண்ணைத் திறக்காமல் படுத்தே கிடந்தாள்.

சிறிது நேரத்தில் அம்மா அவருக்கு சாப்பாடு எடுத்துக் கொடுப்பதும், அதை வாங்கிக் கொண்டு அவர் கிளம்புவதும் காதில் கேட்டது. குடிசையின் கதவைத் திறந்து அவர் போய் மிதிவண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பிய சில நிமிடங்களுக்குப் பின் யதார்த்தமாக எழுவது போல் எழுந்தாள்.

"என்னடி இப்போ தான் எழும்புற .. பொம்பளையா லட்சணமா காலையிலே எழுந்தோமா என்று உண்டா? இன்று விடுமுறை தானே.. சீக்கிரம் எழுந்து எனக்கு சமையலில் உதவக் கூடாதா... நீ எல்லாம் எப்படி தான் ஒரு வீட்டுக்குப் போயி .... "

"அதுக்கு என்ன.. ஒரு வீடு சரி வராட்டி அடுத்த வீட்டுக்கு போகப் போகிறேன்.. நமக்கு என்ன புதுசா?", முகத்தில் அடித்தது போல் சொல்லி விட்டு விசுக்கென போன கௌரியை லட்சுமி பரிதாபமாகப் பார்த்த்தாள் . "அவள் வருத்தப்படுவதும் சரி தானே.. போகப் போக சரியாகிவிடும்" என்பது போல் இருந்தது அவள் பார்வை.


அம்மா செய்திருந்த தோசையை சாப்பிட்டு விட்டு "நான் ராதிகா வீட்டுக்குப் போய் விட்டு வருகிறேன் " என்று புறப்பட்ட கௌரியைக் கமலா கவலையுடன் பார்த்தாள். "செல்லாண்டியம்மா.. இவளுக்கு சீக்கிரம் நல்ல புத்தியைக் குடும்மா... ", மனதுக்குள் குல தெய்வத்தை வேண்டினாள்.


* * * * *
ராதிகா வீட்டிற்கு சென்ற போது, அப்போது தான் சாப்பிட்டு எழுந்த ராதிகா, "அட கௌரி.. வா வா.. " என்றபடி அவளை வரவேற்றாள். "உக்காரு..இதோ வந்துடறேன்.. " . வாசலில் ராதிகாவின் அப்பா சுருண்டு படுத்திருந்தார்.

கௌரிக்கு தோன்றியது, "இவங்க அப்பா கூட தனியாக தானே இருக்கார். அவர் என்ன திரும்ப கல்யாணமா பண்ணினார். அம்மா மட்டும் ஏன் இப்படி?" யோசித்து நின்ற அவளை ராதிகாவின் குரல் நினைவில் இருந்து உலுக்கியது, 'ஏ புள்ள ..வா காட்டுப் பக்கம் போவலாம்", கௌரியை அழைத்துக் கொண்டு ராதிகா நடந்தாள்.



* * * * *

கௌரி 12 வயதுப் பெண். அவளுக்கு 9 வயது இருக்கும் போது அவளது தந்தை இறந்து விட, அவளது பாட்டி உள்ளிட்ட உறவுகள் பார்த்து அவளது அம்மாவுக்கு மறுமணம் செய்து வைத்திருந்தனர்.கௌரிக்கு இது பிடிக்கவில்லை என்பது பெரிய விளைவை ஏற்படுத்தவில்லை .


"நான் சொல்லுறேன் கேளு.. அது சின்னப் புள்ளை . நாள் ஆனா சரியா போயிரும். அம்மா உன் நல்லதுக்கு தான் சொல்லுவேன்" என்ற பாட்டியின் சொற்களில் அம்மா மறுமணத்திற்கு சம்மதித்து , அது நடந்தேறி இரு வாரங்கள் ஆகி விட்டன என்றாலும் கௌரிக்கு என்னவோ அவரோடு ஒட்டவில்லை.

வீட்டை விட்டு வெளியே செல்லவும் தெரியவில்லை, வீட்டிலிருக்கவும் பிடிக்கவில்லை என்ற விதத்தில் அவள் வாழ்க்கை கழிந்து வந்தது. அவள் விவரம் தெரியாதவள் இல்லை. ஆனால் விவரம் தெரிந்தவளும் இல்லை. அப்படி ஒரு வயதில் இருந்த அவளுக்கு மனக்குழப்பம் அதிகமாகி அவை மொத்தமும் அவளது தாயின் புது கணவன் மீது வெறுப்பாக ஆனது.

தாயைப் போல அவரும் எங்கோ கூலி வேலை செய்பவர். சொந்தம் என யாரும் இல்லை. 5 வயது மகனை விட்டு அவர் மனைவி மரணிக்க, அவர் திருமணத்திற்குப் பின் இவர்கள் வீட்டிற்கு வந்து விட்டார். "அப்பா" என அழைக்க மனம் இல்லாத நிலையில், அவரோடு இவள் பேசுவதையே தவிர்த்தாள். அவரும் நிலைமை புரிந்து அமைதியாக நடந்தார்.



* * * * *

வயக்காட்டில் இருவரும் விளையாடினாலும், இவள் நெஞ்செங்கும் சோகம் இருப்பது இவளை விட சில வருடங்கள் மூத்தவளான ராதிகாவுக்கு புரிந்து விட்டது. அவள் மெல்ல பேச்சு கொடுத்தாள் .

"என்ன புள்ள..இன்னும் சோகமாவே இருக்கியா?" அவள் கேட்க, செல்வி பொரிந்து தள்ளினாள்.

"ஆமா அக்கா.. எங்க அம்மா பண்ண அசிங்கம் தான் உனக்கும் தெரியுமே.. அப்படி இருக்க நான் எங்க சந்தோஷமா இருக்க"

சற்றேறக்குறைய இத்தகைய பதிலை எதிர்பார்த்தே இருந்தாலும் 'அசிங்கம்' என்ற வார்த்தை ராதிகாவையே அதிர தான் வைத்தது, "அப்படி ஏன் புள்ள சொல்லுற.. உங்க அம்மாவும் பாவம் தானே !!"

"உனக்கு என்ன... உனக்கு நடந்திருந்தா தெரிஞ்சிருக்கும்... " , கௌரி சொல்ல, ராதிகா பேசத் துவங்கினாள், "எனக்கு புரியும் புள்ள.. "

கௌரி அதிர்ந்து நோக்க, ராதிகா சிறிய இடைவெளி விட்டு பேசத் துவங்கினாள் .

"எங்க வீட்டுல இருக்குறது என்னைப் பெத்த அப்பா இல்லை தெரியுமா?"

கௌரி மேலும் அதிர்ச்சி அடைந்தாள். அதைக் கண்டு கொள்ளாமல் மெல்லிய கண்ணீரோடு ராதிகா கையை நீட்டினாள், "யாரு கிட்டயும் சொல்ல மாட்டேன் னு சத்தியம் பண்ணு " என்று நீட்ட, கௌரி அதிர்ச்சி விலகாமல் அவள் கை மேல் தன் கையை வைத்து அடித்தாள் .

ராதிகா சொல்லத் துவங்கினாள் .




* * * * *

"எங்க அம்மா பள்ளிப்பருவத்துல ஒருத்தரைக் காதலிச்சாங்க. ஆனா எங்க தாத்தாவுக்கு காசு இல்லாட்டியும் சாதிப்பெருமை மட்டும் நெறய இருந்துச்சு. அவரு வேற்று சாதின்னு சொல்லி கல்யாணத்துக்கு ஒத்துக்கலை. அந்த ஊருல அவரு சாதிகாரங்க கை ரொம்ப ஓங்கி இருந்தது. அவங்க துணையோடு வெளியே விஷயம் தெரியாம ரெண்டு பேரையும் பிரிச்சி, தன்னோட சாதியில் வேற ஒரு ஆளுக்கு கட்டி வெச்சிட்டாரு. "


"எங்க தாத்தா பாத்து வெச்ச மாப்பிள்ளை அவரை மாதிரியே. குடிப்பழக்கத்தில் இருந்து சாதிப்பெருமை வரை. ஆனால் வயலில் உழைத்த தாத்தா அளவு கூட வீட்டில் இருந்து அப்பன் காசில் குடித்துக் கொண்டிருந்த அந்த மாப்பிள்ளை தாங்கலை . கல்யாணம் ஆன ரெண்டு வருஷத்துல என்னை கையில் கொடுத்து விட்டு நரகத்துக்குப் போய் சேந்துட்டான்.. என்ன முழிக்குற.. அந்த ஆளை எல்லாம் என்ன சொர்க்கத்துலயா சேர்ப்பங்க", கௌரி வாயடைத்து கேட்டுக் கொண்டிருந்தாள். அவளுக்கு எதுவுமே பேசத் தோன்றவில்லை.

ராதிகா தொடர்ந்தாள், "குற்ற உணர்ச்சியோ என்னவோ, எங்கம்மா தாலியறுத்த சில மாதங்களில் தாத்தா இறந்துவிட்டார். கூடவே பாட்டியும் போய் சேர்ந்துவிட, கூட ஆள் இல்லாத குறையை விட, கண்ட ஆள் எல்லாம் பின்னால் சுற்றியது தான் அம்மாவிற்கு பெரும் தலை வலியைக் கொடுத்தது. ஒரு நாள் வேலைக்கு போய் விட்டு வரும் வழியில் பின்தொடர்ந்து எவனோ வந்தான். பயத்தில் வேகமாக வீட்டிற்குள் நுழைந்த அம்மா, வாசல் படியில் தடுக்கி விழுந்தாள். சுவரில் மோதி ரத்தம் கொட்ட, அம்மா போட்ட கூச்சலில் ஊர் கூடி வருவதற்குள் அம்மா உயிர் போய் விட்டது. காரியம் முடிந்து போன எவரும் இவளைக் கூட்டிப் போகவில்லை. எதுவும் புரியாமல் அவள் தனியே அழுது கொண்டிருந்தாள் . துக்கமும் பசியும் வாட்டியதில் அவள் சீக்கிரமே மயங்கி விழுந்து விட்டாள் . இரவின் இரண்டாம் சாமம் கழிந்த நேரம், மயக்கத்திலேயே கிடந்த அவளை யாரோ தூக்கிக் கொண்டு நடந்து சென்றார்கள். "


"அன்னிக்கு என்னை தூக்கிட்டு வந்தது எங்க அம்மாவைக் காதலிச்சவர், எங்க வீட்டுல இப்போ இருக்காரே எங்க அப்பா அவரு தான். அப்புறம் தான் தெரிஞ்சுது. பல நாட்களா எங்க அம்மாவுக்கு கூட தெரியாம அவர் மறைமுகமா அவளுக்கு காவல் இருந்திருக்கார். அவரு இருக்குறது தெரிஞ்சிருந்தா அவளுக்கு ஒண்ணும் ஆயிருக்காதோ என்னவோ.. எங்க அம்மா விழுந்த நாள் கூட பின்னால வந்தவனை சண்டை புடிச்சி துரத்தி விட்டுருக்கார். அம்மா இல்லைன்னு ஆனதும் என்னையாவது காப்பாத்தணும்னு யாருக்கும் தெரியாம என்னை இந்த ஊருக்கு கூட்டிட்டு வந்துட்டார். உனக்கு தெரியுமா. என்னோட பெயர் செல்வி. எங்க அம்மா பெயர் 'ராதிகா'வையே எனக்கு வெச்சி என்னோட ரூபத்துல எங்க அம்மாவை பாத்துட்டு இருக்காரு. சத்தியமா சொல்றேன். இந்த ஜென்மம் அவரு தான் எனக்கு அப்பா. " கண்ணீரோடு ராதிகா சொல்லி மௌனமானாள்.

கௌரி வெறித்து நோக்க அவள் மேலும் பேசி முடித்தாள், "ரெண்டாம் கல்யாணம் பண்ண கூடாததுன்னு எல்லாரும் இருக்கவே தானே எங்க அம்மா வாழ்க்கை போச்சு. யாராவது பாத்து எங்க அம்மாவை அவருக்கு அப்போ கட்டி வெச்சிருந்தா, எவ்வளவு நல்லா இருந்துருக்கும். எங்க அம்மா குடுத்து வைக்கலை. ". மெல்லிய கண்ணீரோடு அவள் முடித்த வேளை கௌரி கண்ணிலும் தான் நீர் கோர்த்தது.



* * * * *

கனத்த இதயத்தோடு இருவரும் வீடு திரும்ப, கௌரி பின்வாசல் வழியே அவள் வீட்டிற்குள் நுழைந்த போது , அவள் தாயின் கணவன் வாசலில் பீடி குடித்துக் கொண்டிருந்தார். அவர் பேச்சு சத்தம் கௌரிக்கு கேட்டது

"என்ன சுரேஷு ... பீடி வெலிக்க ஆரம்பிச்சுட்ட"

"அட போ முருகேசா.. ஒத்த ஆம்பள புள்ளைன்னா பரவாயில்லை . இப்போ பொண்ணு ஒண்ணு ஆகி போச்சுல்ல.. இப்போதிலிருந்தே நானும் பொறுப்ப்பா சேத்து வைக்கணும்ல", அவர் தன்னை மகள் என்று கூறியதைக் கேட்ட கௌரியின் குழந்தை மனம் நெகிழ்ந்தது.



எப்போதும் சிடு சிடு என இருக்கும் அவளிடம் சேராமல் தள்ளி இருந்த தம்பியை அணைத்துக் கொண்டாள் . அவனும் அவளது அணைப்பின் கதகதப்பில் தன்னை இணைத்துக் கொண்டான். "உனக்கு அக்காவைப் பிடிச்சிருக்கா" , என்ற அவள் கேள்விக்கு, "ம்ம்ம்ம்" என மகிழ்ச்சியாக தலையை ஆட்டினான்.

"என்னடீ.. சாப்பாடு போடவா" , பின்கட்டில் துணி துவைத்து விட்டு உள்ளே வந்த லட்சுமி கேட்க, "அப்பாவையும் கூப்பிடும்மா.. எல்லாரும் சாப்பிடுவோம்" என்ற கௌரியின் சொல்லைக் கேட்டு லட்சுமி இன்ப அதிர்ச்சியோடு, "அதற்கு என்ன ... இதோ கூப்பிடுகிறேன்.. என்னங்க" என்று வாசல் நோக்கிப் போனாள் . நடந்தததை பின்கட்டு ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்த ராதிகாவுக்கு நெஞ்சம் நெகிழ்ந்தது.

காலம் காலமாக சிறுகதைகளும், நாவல்களும் படித்து வளர்ந்த அவள் கற்பனைத் திறன் அன்று தானே யாருக்கோ பயன் பட்டுள்ளது. அம்மா இல்லாமல் வேறு ஊரிலிருந்து வந்த தங்கள் வாழ்க்கையில் கொஞ்சம் கற்பனை கலந்து சொன்னதில், இந்த கௌரிக்கு ' மறுமணம் தவறானது ' என்ற எண்ணம் போய் விட்டதே !!


"சரி - யாரிடமாவது கௌரி இதை சொல்லி விட்டால்....??? ஆனால் அப்படி எல்லாம் சொல்ல மாட்டாள், சத்தியம் செய்தாள் மீறாத பெண் தான் அவள்", தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டு வீட்டை நோக்கி நடந்தாள் ராதிகா !!

Comments