எம லோகத்தில் ஒரு நாள்

எம லோகத்தில்  ஒரு நாள்

இடம்: எம லோகம், எமன் சபை

(சபையில் அனைவரும் கூடி இருக்க, எமன் உள்ளே நுழைகிறார்)

சபையோர்: காளை ஏறும் கைலாச மஹாகாலன் வாழிய !! எருமை ஏறும் எம் அரசன் என்றென்றும் வாழிய !! தருமத்தின் தலைவனான எம தேவன் வாழிய !! 

எமன்: (அரியணையில் அமர்ந்தபடி) சபைக்கு வணக்கம். பூலோகத்தில் எல்லோரையும் வாழாமல் செய்யும் எனக்கு தினமும் வாழிய கோஷம் .. ஹாஹாஹா... நடக்கட்டும். சித்ரகுப்தரே. சபையைத் துவக்கலாமே. 

சித்திரகுப்தன்:  (எமனை நோக்கி)உத்தரவு மன்னா. பயங்களில் பெரும் பயமான மரண பயம் இல்லையேல் தர்மம் தழைக்காது என்று தானே இறப்பின் தெய்வமான உங்களை தர்ம தேவதை என்று அழைக்கின்றனர். ஆகவே உம்மை வாழ்த்துவதில் பிழையேதும் இல்லையே !! (சபையோரை நோக்கி) நம் அரசர்  எமனின் தலைமையில் தற்போது அதிகம் நடக்கும் குற்றங்கள் சிலவற்றை விசாரிக்கக் கூடியுள்ள இந்த சிறப்பு சபைக்கு அனைவரையும் வரவேற்கிறேன். 

எமன்: எம் வாழ்த்து குறித்து  சிறப்பான பதில் அளித்தீர் சித்திரகுப்தரே.. மரண பயம் இல்லையேல்  அதர்மம் மிகும் என்பதில் சந்தேகம் இல்லை.  இன்றைய குற்றவாளிகளைக் காண்போமே.

* * * * * 

இடம்: எம லோகம், வேறோர் அறை

குற்றவாளி 1: நான் என்ன தப்பு பண்ணிட்டேன்னு என்னை விசாரிக்க கூட்டிகிட்டு வந்துருக்காங்க. எனக்குத் தெரிஞ்சு நான் எந்த பெரிய தப்பும் செய்தது இல்ல.. ஆனா இவனுங்க என்னடான்னா சிறப்பு விசாரணை அது இதுன்னு பீதியைக்  கிளப்புறாங்க

குற்றவாளி 2: ஆமாம் பா.  நானும் இன்னா பண்ணினேன்னே பிரில. இட்டாந்து இம்மாம் பேஜார் பண்றானுங்க. பயமாவே கீது.. யாருக்கு இன்னா  பண்ணுனேன்னே தெரில... செத்த பொறவு கூட பீசு (Peace) இல்லியே பா.. ( பெருமூச்சு) 

குற்றவாளி 1: சும்மா இருய்யா.. எதுக்கு வந்தோம்ன்னே தெரியாம நரகத்துக்கு கூட்டிட்டு வந்துருக்காங்க.. பீசு பத்தி பேசிக்கிட்டு இருக்கான். அந்நியன் படம் எல்லாம் என் கண்ணு முன்னாடி வந்துட்டு போகுது. ஆமாம். படம் என்றதும் நினைவு வருகிறது. "அதிசயப் பிறவி"படத்தைப் போல நம்மைத் தவறாக அழைத்து வந்து விட்டார்களோ..?!?!

குற்றவாளி 3: 30 வருடம் அரசுப் பணி செய்தவன் நான். இதோ (குற்றவாளி -2 ஐ காட்டி) இவனைப் பார்த்தாலே சோப்மாரி போல இருக்கான், இவனோட என்னை நிற்க வைத்து விட்டார்கள் எந்த விவரமும் சொல்லாமல்

(குற்றவாளி - 2 ஏதோ சொல்ல வருகிறான். எம தூதர்கள் குற்றவாளிகளை அழைக்க வருகின்றனர்)

எம தூதன்: குற்றவாளிகளே.. எங்களோடு வாருங்கள். 

குற்றவாளி 3:: யோவ்... குற்றம் சாட்டப்பட்டவர் அப்படின்னு சொல்லுய்யா. அதான் இன்னும் தீர்ப்பு சொல்லலை இல்ல.

குற்றவாளி 2: கசுமாலம்.... சினிமா ரொம்ப பாப்பியா... இது இன்னா நம்மூரு கோர்ட்-ன்னு நெனிசிக்கினியா..  வருஷம் வருசமா கேஸ் நடத்திகினு மாமூலா  வெளியே சுத்திகினு கீறதுக்குு... சாமி  கீற இடம்யா.. இன்னாமோ தப்பு செய்ஞ்சிக்கிறன்னு தெர்ஞ்சு தான் இஸ்துக்குனு வந்துருக்காங்க.. ரெஸ்பேட்டா (respect) கெட.. டாப் பேந்துரும்.. . 

குற்றவாளி 3: (முறைக்கிறான்)

குற்றவாளி 1: உனக்கு நிறைய தெரிந்துள்ளதே !! 

குற்றவாளி 2: (பெருமையாக) யோவ்... நீ "லக்கி மேன்" படம் பாத்தது இல்லையா. அதுல வர்ற எமனோட ஊருக்கு தான் நாம இப்போ செத்துப் போயி வந்துக்குறோம். 

குற்றவாளி 3: ஓ.. (எமனைக் காட்டி) இவரு தான் இப்போ கவுண்டமணி கேரக்டர்-ல நடிக்கிறாரா.

குற்றவாளி 2: பேமானி... கவுண்டமணி தான் இவரு கேரக்டர்-ல நடிச்சாரு... நீலாம் இன்னாத்துக்கு உசுரோட கீரியோ...

குற்றவாளி 3: இப்போ எங்க உயிரோட இருக்கோம்.. நீ உளறிக்கிட்டு என்னை சொல்லுறியா (கையை ஓங்குகிறான்)

குற்றவாளி 2: (கோபமாக) கம்னு கெட..மெர்சலா பூடுவ ..

எம தூதன்: அமைதியாக இருங்கள் மானிடர்களே . இங்கு கத்தக் கூடாது. என்னோடு சபைக்கு வாருங்கள் (சபைக்கு அழைத்து வரப்படுகின்றனர்.)


* * * * * 
இடம்: எம லோகம், எமன் சபை

(குற்றவாளிகள் உள்ளே அழைத்து வரப்படுகின்றனர்)

சித்திரகுப்தர்: மன்னா.. இவர்கள் செய்த மற்ற தவறுகளுக்கான தண்டனைகளை  முடிவு செய்து விட்டோம். கொரோனா  கிருமி நமக்கு வேலைப்பளுவை மிகவும் அதிகரித்து விட்டுள்ள நிலையில் அது தொடர்பான  சில சிறப்பு  முடிவுகளை மட்டும் தாங்கள் கூற வேண்டும். 

எமன்: அப்படியே....முடிவு விவரங்களை ...

குற்றவாளி 3: (கோபமாக) யோவ்... நிறுத்துய்யா... என்னய்யா விசாரணையே இல்லாமல் முடிவைச் சொல்கிறாய். இது எல்லாம் சரி இல்லை. அப்படி என்னய்யா நான் தப்பு செய்தேன்.பதில் சொல்லுய்யா. நான் 30 வருடம் சர்வீஸ் கொண்ட அரச ஊழியன். என்னை ஏமாற்ற முடியாது புரிகிறதா?

(எமன் மெல்ல கோபமாகிறார்)

குற்றவாளி 2: (மனதுக்குள்) ஐயோ..இவன் படா பேஜாரா கீரானே... (சபை முன் எமன் காலில் விழுந்து) ஐயா சாமி.. நீங்க பெரிய மனுஷாளுங்க..ச்சேய்.. சாமிங்க... எங்கள இன்னாத்துக்கு இஸ்துக்குனு வந்துக்குறாங்கன்னே பிரியல. அத்தொட்டு தான் அது தப்பா பேசிருச்சு.. மன்னிச்சி சொல்லு சாமி..இன்னாத்துக்கு எங்களை இஸ்துகினு வந்துக்குரிங்கோ... 

எமன்:மானிடரே..எழுந்திரும்.. உமது அடக்கம் உம்மை அமரருள் உய்க்கும். (மூவரையும் நோக்கி) நீங்கள் இங்கு அழைத்து வரப்பட்டதற்கான காரணங்களும் உங்களுக்குத் தெரிவிக்கப்படும். சித்திரகுப்தரே... !!

சித்திரகுப்தர்: உத்தரவு மன்னா... இதோ இவர்கள் வினை விவரங்களைத் தெரிவிக்கிறேன். இதோ மூன்றாம் குற்றவாளி. இவர் கொரோனா நேரத்தில் முக கவசம் அணியாமலும், கண்டபடி வெளியில் சுற்றியும் பலருக்கும் தன்னை அறியாமலே நோயைப் பரப்பி உள்ளார். இவருக்கு எதிர்ப்பு சக்தி அதிகம் இருந்ததால் இவருக்கு நோய் பாதிப்பு இல்லை எனினும் இவரால் பலருக்கும் நோய் பரவி உள்ளது. பலர் சொல்லியும் இவர் கேட்கவில்லை என்பதோடு, ஒழுங்காக முகக்கவசம் போட்டிருந்தவர்கள் பலரையும் கேலியும்  இவர் செய்துள்ளார். இவர் பரப்பி விட்ட நோய் காரணமாக நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். 12 பேர் இவர் மூலம் தொற்று ஏற்பட்டு உயிர் இழந்துள்ளனர். இவருக்கு அளிக்க வேண்டிய தண்டனையை முடிவு செய்ய வேண்டும். பலர் சிகிச்சையில் உள்ள நிலையில் இவர் கொலை செய்தோர் எண்ணிக்கை அதிகம் ஆகலாம்

குற்றவாளி 3: என்ன கொலையா.. நான் சுத்த சைவம் ஐயா.. ஆடு மாட்டுக்குக் கூட தீங்கு செய்ததில்லை. அறியாமல் செய்த தவறு அல்லவா இது. 

சித்திரகுப்தர்: மானிடரே.. தெரியாமல் செய்த கதைகள் எல்லாம் பூலோகத்தோடு சரி. உங்களின் வினைகளின் பலனை நீங்கள் அனுபவித்தே தீர வேண்டும். 

குற்றவாளி 3: நீங்கள் தீர்ப்பு சொன்னால் பரமேஸ்வரனிடம் மேல் முறையீடு செய்யலாம் அல்லவா? அது வரையில் தண்டனை கிடையாது அல்லவா?

சித்திரகுப்தர்: கைலாசநாதா... ஐயா.. செய்த தவறுக்கு வருத்தம் கூட படாமல், நம்மால் இத்தனை பேர் இறது உள்ளனரே என்ற எண்ணமும் இல்லாமல் தண்டனையிலிருந்து தப்பிப்பது மட்டுமே குறிக்கோளாக உள்ளீர்களே. பூவுலக சட்ட நடைமுறை தங்களை மிகவும் கெடுத்துள்ளது. 


குற்றவாளி 2: நடைமுறையா.. ஒ... சிஸ்டம் ஆ... கரீட்டு பா... சிஸ்டம் சரி இல்ல னு தலீவரு கூட சொன்னாரு பா... 

சித்திரகுப்தர்: (குற்றவாளி 3ஐ நோக்கி) ஐயா... இங்கு மேல்முறையீடு எல்லாம் கிடையாது. பரமனாக மனம் இறக்கினால் உண்டு.. ஆனால் அப்படி எல்லாம் அவர் செய்வதில்லை. செய்த வினைக்கான பலனை அனுபவிக்க வேண்டும் என்பதை விதித்ததே அந்த வேத நாயகன் தானே. 

குற்றவாளி 3:  அப்போது வேறு வழியே இல்லையா? 

சித்திரகுப்தர்: (உதட்டைப் பிதுக்கி "இல்லை" என்பதாகத் தலை ஆட்டுகிறார். )

குற்றவாளி 2:  நான் இன்னாபா  தப்பு செஞ்சேன்.. அத்த சொல்லு பா.. மனசுக்கு படா பேஜாரா கீது. யாருக்கு இன்னா கெடுதல் செஞ்சேன் நான்???

சித்திரகுப்தர்: சற்று பொறுங்கள் ஐயா. மற்றவரைப் பற்றியும் கூற வேண்டும்.  (குற்றவாளி 1-ஐ நோக்கி), இதோ இவர் ஓயாமல் பல செய்திகளை வாட்ஸாப் மூலம் பலருக்கும் பரப்பியுள்ளார். அவற்றில் பெரும்பாலும் தவறான, பீதியை ஏற்படுத்தும் செய்திகளே. தவறான மருத்துவக் குறிப்புகள், பொய் செய்திகள், ஒன்றைப் பத்தாக்கும் தகவல்கள் என பலவும் இவற்றுள் அடங்கும். பொழுதுபோக்காகவும், நன்மை செய்வதாக எண்ணியும் இவர் செய்தாலும் இவற்றால் பாதிக்கப்பட்டோர், படுவோர் எண்ணிக்கை எண்ணில் அடங்கா. இதனால் பயந்து பயந்து பலரும் துன்பம் அடைகின்றனர். இவர் அனுப்பிய செய்திகள் கொரோனாவை விட வேகமாகப் பரவி பெரும் குழப்பங்களை விளைவித்து உள்ளன. இத்தகைய செய்திகளால் உண்மையான செய்திகளின் வீரியம் மிகவும் குறைந்துள்ளது. இதுவே இவர் செய்த குற்றம். 

குற்றவாளி 1:  (என்ன சொல்வதெனத் தெரியாமல் விழிக்கிறார்) 

எமன்: தீர்ப்பை இப்போது நான் அறிவிக்கிறேன். 

குற்றவாளி 2: சாமி.. என் விஷயம்...

எமன்: அதைப் பேசுவோம்.. அதற்கு முன்பு இவர்கள் குறித்த தீர்ப்பை அறிவிக்கிறேன். சபையோரே... முதலில், இந்த சபையைக் கூட்டியதன் காரணமே இதே தவறுகளைப் பலரும் செய்வதால், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக முடிவு கூறத்தான். இனி இத்தகைய தவறு செய்வோருக்கும் இந்த தண்டனையே பொருந்தும். 

(சபையோர் ஆர்வமாகக் கேட்கின்றனர்)

எமன்: (குற்றவாளி 1-ஐ காட்டி)நன்மை செய்வதாக நினைத்தே இவர் பல செய்திகளைப் பரப்பியுள்ளார். ஆயினும் தொழில் தெரியாத மருத்துவன் தந்த மருந்து போல் விவரம் அறியாமல் இவர் அனுப்பிய  செய்திகள் பெரும்பாலும் கேடையே விளைவித்துள்ளன. விவரம் அறியாத பலர் இவர் அனுப்பிய செய்திகளைப் படித்து குழம்பி என்னவென்று புரியாத மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். எனவே இவரை மூடப்பட்ட கிணற்றுக்குள் பூச்சி, பல்லிகளோடு  வாசம் செய்யும் நரகமான அந்தகூபத்திற்கு அனுப்பும் தண்டனையை அளிக்கிறேன். அங்கு மர்மப் பூச்சிகள் இருளில் கடிக்கும் துன்பம், அறியாதோருக்கு இவர் செய்திகள் ஏற்படுத்திய மன உளைச்சலின் வலியை உணர்த்தும் என்று கருதுகிறேன். இந்த தண்டனை இவர் அனுப்பிய கடைசி பொய் செய்தி கடைசியாகப் பரவும் நாள்  வரை தொடரும். 


சபையோர்: ஆஹா.. ஆஹா...

எமன்: குற்றவாளி 3.. இவரால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குற்றவாளி 1-ஐ விட மிகக் குறைவே. ஆயினும், இவர் செய்த தவறு தெரியாமல் செய்ததன்று. தெரிந்தே செய்த திமிர்ச் செயல். இவர் விளைவுகள் அனைத்தும் அறிந்தும் மமதையால் தீங்கு விளைவித்து உள்ளார். தவறு நடந்ததை அறிந்த பின்னும் தப்பிக்கவே முயல்கிறார். இவருக்கு எம கிங்கிரர் அடித்து உடைத்து வலிக்க வலிக்க குற்றவாளியின் சதையைப் புசிக்கும் மகா ரௌரவ தண்டனையை அளிக்கிறேன். . தலைக்கனத்தால் பிறர் உயிரைக் குடித்துள்ள இவருக்கு இந்த தண்டனையே சரியானது.

சபையோர்: சிறப்பு.. சிறப்பு... 

குற்றவாளி 2: சாமீ.. எனக்கு.... (இழுக்கிறார்)

சித்ரகுப்தன்: இவரைப் பொறுத்த வரையில்... 

எமன்: அதை நானே கூறுகிறேன். இவர் ஒரு புண்ணிய ஆத்மா. உலகெங்கும் கொரோனா பயம் காரணமாக ஒளிந்திருந்த நிலையில் இவர் தன்னாலான உதவிகளை செய்து வந்துள்ளார். தான் நடத்திய சிறிய கடையில் வீடற்றோர் இருவருக்கு இரவில் இருக்க இடம் அளித்து உள்ளார். மேலும் தன் சுற்றுப்புறங்களில் உள்ள ஏழைகளுக்கு தானே சமைத்த உணவை இலவசமாக அளித்துள்ளார். தான் வாழ்ந்த ஏழ்மையில் இவர் செய்த இந்தச் செயல்கள் போற்றத்தக்கவை. 

குற்றவாளி 2: (சபையோர் பெருமையாக வியந்து நோக்க, மெல்ல தலை குனிகிறார்)

எமன்: பின்னர் ஏன் இவரை இங்கு அழைத்து வந்தோம் என்பது உங்கள் கேள்வியாக இருக்கும். பூவுலகில் இருக்கும் அனைவருக்கும் இருப்பது போலே இவரும் செய்த சிறிய தவறுகள் உண்டு. ஆகவே இவரை சொர்க்கம் அனுப்பும் முன் அத்தவறுகளுக்குரிய பலனையும் அனுபவிக்கச் செய்து விட்டு , பின் இவரை சொர்க்கம் அனுப்புவதே சரியாக இருக்கும் என்ற நிலையில் தான் இவரை இங்கு வரச் செய்தேன். இங்கு வந்தது முதல், இளகிய மனம் கொண்ட இவர், தன்னால் யாருக்கு எந்த தீங்கு நேர்ந்திருக்குமோ என்று எண்ணி வருந்திக் கொண்டே இருந்தார். இவரது இந்த இரண்டு நாழிகை வருத்தம் இவர் செய்த பாவங்களின்  பலனாக வந்ததே. மானிடரே. நீர் ஒரு புண்ணியவான். கல்லாதவராய் இருந்தும் நீங்கள் கொண்டிருந்த மனிதம் போற்றத்தக்கது. அதற்கு எம் வாழ்த்துக்கள். இதோ நீர் இந்த பல்லக்கில் ஏறி சொர்கத்திற்குச் செல்லலாம். 

குற்றவாளி 2: (கண்களில் கண்ணீருடன் கை கூப்புகிறார்)

குற்றவாளி 3:  (குற்றவாளி 2-ன் கால்களில் விழுகிறார்) உங்களை தோற்றத்தை வைத்து தவறாக எடை போட்டு ஏளனமாகப்  விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள். 

(பல்லக்கு வர, குற்றவாளி 2 அனைவருக்கும் வணக்கம் சொல்லிய பின் அதில் ஏறுகிறார். )

குற்றவாளி 3: (எமனை நோக்கி) ஸ்வாமி... எனக்கு அளித்த தண்டனையை அனுபவிக்க செல்லும் முன் இவரைச் சுமக்கும் பல்லக்கை நான் சுமந்து செல்ல விரும்புகிறேன். அதுவே என் மனதிற்கு ஆறுதல் தரும். என் அகங்காரம் அழிந்தது. அருள் புரிய வேண்டும். 

(எமன் கைதூக்கி அனுமதி தர மற்ற பல்லக்கு தூக்கிகளோடு குற்றவாளி-3 பல்லக்கைத் தூக்கிச் செல்கிறார். குற்றவாளி-1 தூதர்களால் தண்டனையை நிறைவேற்ற அழைத்து செல்லப்படுகிறார்).

  ---முடிவு---

உங்களுக்கு இந்தக் கதை பிடித்திருந்தால், அடுத்து வரும் கதைகள் பற்றி அறிய : Vetti Vaayan / வெட்டி வாயன்  என்ற முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.



Comments

  1. மிக அற்புதமான நாடகம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நன்றி தலைவா

    ReplyDelete
  3. Tooooo good...much need story at this time

    ReplyDelete

Post a Comment