என்னைப் போல் ஒருவன்


என்னைப் போல் ஒருவன் 

"என்னங்க.. அங்கே பாருங்களேன்... ", வெண்டைக்காயைப் பொறுக்கி எடுத்துக் கொண்டிருந்த விவேக்கைப் பனிமலர் அழைத்தாள்.

"என்னம்மா... ஒரு ரெண்டு நிமிஷம் விட மாட்டேன் என்கிறாயே...", சொல்லிக் கொண்டே அவள் காட்டிய திசையை நோக்கியவன் விழிகள் வியப்பில் வியந்தன.


"ஹேய்ய்.. அசப்பில் என்னை மாதிரியே இருக்கான்ல...", அவன் ஆச்சர்யத்தோடு சொன்னான். அதற்குள் அந்த மனிதனும் இவனைப் பார்த்து வியப்படைந்து இவனை நோக்கி வந்தான்.





சில நொடிகள் இருவரும் ஒருவரை ஒருவர் நோக்கியபடி இருந்தனர். பின்னர் சிரிப்புடன் கை குலுக்கித் தத்தம் பெயர்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

"என் பேரு ராமநாதன். ராமான்னு கூப்பிடுவாங்க. உங்களைப் பார்த்ததுல ரொம்ப மகிழ்ச்சி.. வாங்களேன் ஒரு காபி குடிச்சுக்கிட்டே பேசுவோம்...", அவன் அழைக்க, விவேக்கும் பனிமலரும் வாங்கிய காய்கறிக்குரிய பணத்தைக் கொடுத்துவிட்டு அவனோடு அருகிலிருந்த உணவகத்திற்குச் சென்றனர்.

சூடான காபியை ஆற விட்டு ராமா பேச ஆரம்பித்தான், "நான் கோடம்பாக்கம் சார்... சொந்த ஊரு காரைக்குடி பக்கம். எங்க அம்மா அப்பா காதல் கல்யாணம் பண்ணதால ஊரை விட்டு ஒதுக்கி வெச்சிட்டாங்க. ஊரோடு பெரிய தொடர்பு இல்ல. இப்போ பெத்தவங்களும் காலமாயிட்டாங்க. நான் என் மனைவி, குழந்தையோடு இங்கேயே ஒரு சின்ன பிளாட்ல குடியிருக்கேன். இங்க தான் திருவான்மியூர் அருகில் அலுவலகம். ", சொல்லி விட்டு அவன் காபியை அருந்தத் துவங்கினான். 

 ஏதோ சொல்ல வந்த விவேக், செல்பேசி ஒலித்ததால் அதைக் கையிலெடுத்தான்.
எதோ ஒரு வாட்ஸ்அப் செய்தியைப் படித்த விவேக்கின் முகம் மாறியது… "ஐயோ" என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன், பனிமலரைப் பார்த்து,  "அடடா.. பனி... என் அலுவலக நண்பரின் தாய் திடீரெனக் காலமாகி விட்டாராம். உடனடியாக நான் செல்ல வேண்டும். வா போகலாம்... " என்று சொன்னபடி, "ராமா... சாரி... இப்போ அவசரமாகப் போகணும்...இன்னொரு நாள் பேசுவோம்" என்று சொன்னபடி அவளை இழுக்காத குறையாக அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு வந்தான். ராமா கையிலிருந்த காபி கோப்பையுடன் அவர்களைக் குழப்பத்துடன் பார்த்தான்.

* * * * * 

வீட்டிற்குள் நுழைந்து காற்றாடியை(பேன்) ஓட விட்டு அவன் நாற்காலியில் அமர்ந்தவுடன்,  பனிமலர் தன் ஆதங்கத்தைக் கொட்டினாள்.

"என்னங்க...  அந்தப் பையன் நல்லவன் மாதிரி தெரிஞ்சான். குறைந்த பட்சம் செல் பேசி எண் மட்டுமாவது வாங்கி இருக்கலாம்.. அங்கே அவசரம் என்று சொல்லிவிட்டு இங்கே ஒய்யாரமாக அமர்ந்து உள்ளீர்கள்...  ஆமாம்…  உங்களுக்கு அப்படி அலுவலகத்தில் யாரும் உற்ற நண்பர் கிடையாதே. யாரு வீட்டுல செய்தி?"

"அடி  போடி.. இவ வேற.. நானே எப்படி அவனைத் கழட்டி விடுவது என்று யோசித்த நேரம் என் செல்பேசி ஒலித்தது. அது தான் சாக்கு என்று நானும் எதையோ சொல்லி விட்டு வந்து விட்டேன்… " என்று ஒரு பெருமூச்செறிந்து தொடர்ந்தான்.  "எங்க அம்மா வழி பெரியம்மா ஒருத்தங்க ஊரை விட்டு ஓடிப் போனதா சொல்லியிருக்கேனில்ல. அவங்க கோடம்பாக்கம் பக்கம் தான் எங்கேயோ இருக்காங்கன்னு அம்மா சொல்லியிருக்காங்க. இவன் அவங்க பையனா இருக்கணும். முகம் வேற என்னை மாதிரியே இருக்கு… அதான் எனக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. "

அவள் விழித்துப் பார்க்க, "என்ன முழிக்கற... இப்படியே வாழ்க்கை பூரா முழிச்சுக்கிட்டே இரு… முட்டாள்… இவ்ளோ நாள் கழிச்சு இப்போ தான் தாத்தா சொத்தில் அம்மாவுக்குன்னு இருக்குற பங்கைத் தர மாமா ஒத்துக்கிட்டு இருக்கார். இப்போ இவன் வேற வந்து, இவனுக்கும் ஒரு பங்குன்னு ஆரம்பிச்சா, நமக்கு வர்ற கொஞ்சம் சொத்தும் பாதி ஆகி விடும். வேறு வினையே வேணாம். இப்போ எதற்கு அவன் உறவு... இனி காய்கறி கூட அங்கே வாங்க வேண்டாம். திரும்ப வந்து தொலைக்கப் போகிறான். நீயும் அம்மா கிட்ட இதைப் பற்றி எதுவும் பேசிக்காதே. " கண்டிப்பான குரலில் சொன்னான்.

சில நிமிடங்களில், எதையோ நினைத்து மெல்லிய சிரிப்பு அவன் உதட்டில் தவழ்ந்தது. "அதுல என்னன்னா, அந்த அவசரத்துல எனக்கு எதுவும் நல்ல பொய் கூடத் தோன்றவில்லை. அலுவலக நண்பரின் தாய் மரணம் என்று அரதப் பழசான மொக்கைப் பொய்யைச் சொல்லிட்டு வந்தேன்… அது தான் இருப்பதிலேயே கொடுமை", விவேக் சொல்ல, பனிமலர் சிலையென நின்றாள்.


* * * * * 

உங்களுக்கு இந்தக் கதை பிடித்திருந்தால், அடுத்து வரும் கதைகள் பற்றி அறிய : Vetti Vaayan / வெட்டி வாயன்  என்ற முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Comments