நாத்தி


நாத்தி


"அவள் ஆசைப்பட்டு விட்டாள். அதற்கு மேல் நாம் அவளைக் கட்டாயப்படுத்தி என்ன ஆகப் போகிறது. என்னங்க... சொல்லுங்க...", தன் நாத்தனாரின் காதலுக்கு ஆதரவாக சுமதி தன் கணவனிடமும் , மாமனாரிடமும் வாதிட்டுக் கொண்டு இருந்தாள்.

"அவங்க வேற ஆளுங்க... ஏதாவது பிரச்சனை வந்தா...", சொல்ல வந்த கணவனை இடை வெட்டிய சுமதி, "பிரச்சனை எல்லாம் வாழ்க்கையில சகஜம்ங்க... மனமிருந்தால் மார்க்கமுண்டு. ஜாதி, ஜாதகம் எல்லாம் பார்த்தாலும் மனசுக்குப் பிடிக்காத இடத்தில் அவள் எப்படிங்க சந்தோஷமாக இருப்பா?", சுமதி வாதிட்டாள்.

" என்ன தான் இருந்தாலும் அப்பா மனசுக்குப் பிடிக்காதப்போ ...." என்று ஏதோ சொல்ல வந்த அவள் கணவனிடம் அவன் தந்தை, "எனக்கு இதிலெல்லாம் விருப்பமில்லை. இருந்தும் சுமதி சொல்வதைப் போல, நமது பெண் ஆசைப்பட்டு விட்டாள். அதை ஏன் கெடுக்க வேண்டும். அவள் விருப்பம் போல வாழ்ந்து கொள்ளட்டும்." என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

அவர் மகள் மீது இருந்த கோபத்தை மீறி, அவள் காதலுக்கு அக்கறையோடு பரிந்து பேசிய சுமதி மீது அவருக்குப் பெருமையும் பரிவும் பொங்கியது.


* * * * *


அடுத்த சில நாட்களில் தாய் வீட்டிற்கு சென்ற சுமதியிடம் அவளது தங்கை சொன்னாள், " ஆனாலும் உனக்குப் பெரிய மனசு அக்கா... பலரும் நாத்தனார் வாழ்க்கையை எப்படி கெடுக்கலாம்னு பார்க்குறாங்க. நீ இந்த காலத்துல, உன் நாத்தி காதலுக்கு ஆதரவாப் பேசி எல்லாத்தையும் முடிச்சு வைச்சிருக்க ".

"ஆமா ஆமா... எனக்கு அவள் மேல ரொம்ப கரிசனம் தான்... நீ வேற... எங்கள் சொத்து மொத்தம் என் மாமனாரோட சுய சம்பாத்தியம். அவங்க அப்பாவுக்கு மகள் மேல் ரொம்ப பாசம். அதனால் சொத்தில் பங்கு கொடுத்து விடுவாரோ என்று பயந்தேன். அவள் காதல் கல்யாணம் செய்து கொண்டால், அவங்க அப்பா எப்படியும் அந்தக் கோபத்தில் அவளுக்கு சொத்தில் எதுவும் பங்கு கொடுக்க மாட்டார்... எங்களுக்கே முழு சொத்தும் வரும் என்றெண்ணிப் பேசினேன். அதோடு அவள் புகுந்த வீடு பற்றியும் விசாரித்து விட்டேன். அவர்கள் வழக்கத்தில் திருமண செலவில் பாதியை பையன் செய்யும் வழக்கம் வேறு உண்டாம் . அதனால், இந்த திருமணத்தால் திருமண செலவும் எங்களுக்குப் பாதியாகக் குறைவு."

வியந்து நோக்கிய தங்கையிடம் சுமதி தொடர்ந்து சொன்னாள், "அதில் என்ன சிறப்பு என்றால் தொலைந்த தோடைத் தேடிப் போனவளுக்கு புதையல் கிடைத்தாற் போல, நேற்று என் மாமனார் என்னிடம் வந்து, காலமான என் மாமியரின் நகை அத்தனையும் கொடுத்து, 'உன் நல்ல மனசுக்கு நீ தான் இதையெல்லாம் போட்டுக்கணும்' ன்னு சொல்லி கொடுத்து விட்டுப் போய்விட்டார். ஏறத்தாழ அறுபது சவரன். அடுத்த முறை நீ வீட்டுக்கு வரும் பொழுது காட்டுகிறேன்", பெருமையுடன் சொன்னாள். அவள் முகம் பூரிப்பால் மலர்ந்திருந்தது.

- வெட்டி வாயன்

* * * * ** * * * *


உங்களுக்கு இந்தக் கதை பிடித்திருந்தால், அடுத்து வரும் கதைகள் பற்றி அறிய : Vetti Vaayan / வெட்டி வாயன்  என்ற முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Comments