நல்ல வாழ்க்கைத்துணை

"நல்ல வாழ்க்கைத்துணை "


"என் நிலையைப் பற்றிக் கொஞ்சமாவது யோசித்துப் பார்த்தானா?  இப்போ என் நிலைமை என்ன ... அதை நினைத்திருந்தால் இப்படி செய்திருப்பானா?" கண்களில் கண்ணீருடன் அம்மு கதறிக் கொண்டிருக்க , ஆறுதல் சொல்லத் தெரியாமல் அவளது அக்கா அணைத்தபடி நின்றாள்.


* * * * *

அம்முவுக்கும், குமாருக்கும் ஒரு வருடம் முன்பு தான் திருமணம் நடந்தேறியது. யார் கண் பட்டதோ, திடீரென குமாருக்குக் கேன்சர் நோய் வந்து விட்டது. சாதாரணமான கட்டி என எண்ணியது ஆறாமல் தொடர, மருத்துவர் எழுதிக் கொடுத்த இரு டஜன் பரிசோதனைகளுக்குப் பிறகு தெரிய வந்தது அது புற்றுநோய் என்று.

முற்றிய நிலையிலே கண்டறியப்பட்டதால் குணமடைதல் கடினம் என்பதோடு, சில வாரம் மட்டுமே உயிருடன் இருப்பான் என மருத்துவர்கள் கை விரித்து விட, தன் வாழ்வின் இறுதி நாட்களை எண்ணத் துவங்கினான் குமார். 


நாளுக்கு நாள் வலி அதிகமாக, ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் கிடைத்த ஏதோ விஷத்தை முழுங்கி இறந்து விட்டான் குமார். அவன் இறுதிச் சடங்குகள் முடிந்த பின் வீட்டில் அழுது கொண்டு இருந்த அம்முவை அவள் அக்கா தேற்ற முயற்சித்துக் கொண்டு இருந்தாள்.

* * * * *

"சரி விடுடி. நடந்தது நடந்து போச்சு. விதியை யாரு மாற்ற முடியும். குமார் போகணும்னு இருந்தால் அதை யாரு மாத்த முடியும். அவரும் உடல் வேதனை தாளாமதானே தற்கொலை பண்ணிக்கிட்டார்... நீ மனசைத் தேத்திக்கோ... "

"அடச்சீ... அவன் இல்லையேனு யாரு அழுதா. சீக்குக்கு பொறந்தவன். அவனோட சினிமா, பீச் -னு போனதை விட மருத்துவமனை போனது தான் அதிகம். நானே விவாகரத்து பண்ணிரலாம்னு இருந்தேன். ஏதோ இன்னும் ஒரு வாரமோ, இரண்டு வாரமோ இருந்தா அவனோட 1 கோடி காப்பீட்டு பணம் (Insurance) பணம் வருமேன்னு பாத்தா பாவிப் பய விஷம் குடிச்சு செத்து அதுல மண்ணை அள்ளிப் போட்டான். கொஞ்சமாவது ஒரு நல்ல வாழ்க்கைத்துணையா லட்சணமா நான் நல்லா இருக்கணுமேன்னு  யோசிச்சு இருந்தா இப்படி செய்திருப்பானா? " அம்மு கண்ணீருடன் எரிச்சலாகச் சொல்ல, வாயடைத்து நின்ற அவள் அக்காவுக்கு இன்று வரை புரியவில்லை - அவர்களில்  யார் நல்ல வாழ்க்கைத்துணை  இல்லை என்று. 

* * * * *

உங்களுக்கு இந்தக் கதை பிடித்திருந்தால், அடுத்து வரும் கதைகள் பற்றி அறிய : Vetti Vaayan / வெட்டி வாயன்  என்ற முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Comments