வசூல் ராஜா


வசூல் ராஜா

"நீங்க நல்லா இருக்கணும் சார்... நான் கும்புடுற கடவுளையே நேர்ல பாத்த மாதிரி இருக்கு சார்", டாக்டர் ஞானபிரகாசத்தைப் பார்த்து கும்பிடு போட்டபடி சென்ற ரமேஷை கலைவாணி வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் அந்த மருத்துவமனையில் தலைமைச் செவிலி (Nurse).  தலைமை மருத்துவர் ஞானபிரகாசத்தின் இல்லத்தரசி. மருத்துவத் துறை முழுமையாக தொழிலாக ஆகிவிட்ட இந்த காலத்தில் தன் கணவனின் தொழிலுக்குத் துணையாக இருப்பவள்.

* * * * * 

ஐந்து நாட்களுக்கு முன்பு பிரசவத்திற்காக அவர்கள் மருத்துவமனையில் சேர்ந்த ரமேஷின் மனைவி, சுகப் பிரசவத்தை எதிர்பார்த்திருந்த நிலையில் திடீரென உடல்நிலை மோசமாகி, ரத்தப்போக்கு அதிகமாகி விட, அவசரமாக அறுவை சிகிச்சை செய்து, குழந்தையை எடுத்து இன்குபேட்டரில் வைத்து இப்போது தான் வெளியே எடுத்திருக்கின்றனர்.

 சுக பிரசவம் ஆகி விடும் என்ற நம்பிக்கையில் சேர்த்ததால், வெறும் இருபதாயிரம் முன்பணமாகக் கட்டிச் சேர்த்திருந்த நிலையில் அவசர அறுவை சிகிச்சை, இன்குபேட்டர் கட்டணம் என ஒரு லட்சத்தைத் தாண்டி மருத்துவச் செலவுகள் சென்ற நிலையில், பணம்கட்ட வேண்டிய நிலையில் தான் ரமேஷ் தன்னால் உடனடியாக அத்தனை பணம் தர முடியாது என வந்து மருத்துவரிடம் அழுதார். 

"மொத்த காசையும் கட்டிட்டு தான் மறுபேச்சு", சண்டை போடுவார் என்றுஅனைவரும் சொன்ன நிலையில், "சரி சார், பரவாயில்லை. கொஞ்சம் கொஞ்சமா புரட்டி குடுத்துருங்க. இப்போ வீட்டுக்கு கூட்டிட்டு போங்க முதல்ல.. அப்புறமா எல்லாம் பேசிக்கலாம்", ஞான பிரகாசம் சொன்னதைக் கேட்டு இன்ப அதிர்ச்சி அடைந்தார் ரமேஷ்.  

"என்னவெல்லாம் சொன்னானுங்க.. காசுல ரொம்ப கறார். மனசாட்சி இல்லாம வசூல் பண்ணுவான்னு எல்லாம். மனுஷன் இவ்வளவு நல்லவரா இருக்கார்", நினைத்தபடி நகர்ந்த ரமேஷ் கூறியவை தான் முதல் பத்தி சொற்கள்.

* * * * * 

அன்று இரவு வீட்டில் கலைவாணி சொன்னாள், "ஆனாலும் உங்களுக்கு இத்தனை இரக்க குணம் இருக்குனு நான் கூட நெனைச்சதில்லைங்க. ஒவ்வொரு சமயம் நீங்க கறாரா பேசுறப்போ, எனக்கு ஒரு மாதிரியா இருக்கும். ஆனா இன்னிக்கு ரமேஷ் பொண்டாட்டிய நீங்க காசு கூட முழுசா வாங்காம  டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு அனுப்புனீங்களே.. என் மனசே ஒரு மாதிரி ஆயிருச்சு. இப்போ கூட என்னால நீங்க அப்புடி பண்ணீங்க னு நம்ப முடியல." , அவள் கண்களில் லேசாக கண்ணீர் திரையிட்டது.


தலையில் அடித்துக் கொண்ட ஞானப்பிரகாசம் சொன்னார், "நாசமா போச்சு. எனக்கு என்ன ஆசையா ஒரு லட்சத்தை தண்டமா அழ.. இவன் பொண்டாட்டியும் புள்ளையும் செத்தா எனக்கென்ன... நீ புதுசா வெச்ச அந்த ரமா நர்ஸு பண்ண வேலை. பேதி மருந்து குடுக்க சொன்னா, பேதி நிக்க மருந்து கொடுத்துருக்கு அந்த பொண்ணுக்கு. அவசரமா குழந்தையை வெளிய எடுக்குற வரைக்கும் என் உயிரை நான் கையில புடிச்சிட்டு இருந்தது எனக்கு தான் தெரியும். எவ்வளவு சீக்கிரம் அவங்களை ஹாஸ்பிடலை விட்டு அனுப்புறமோ நமக்கு நல்லது. இனி பிரச்சனையை இல்லை. அவன் கிட்ட எல்லா கையெழுத்தும் வாங்கியாச்சு. மொதல்ல அந்த ரமாவை வேலையை விட்டு தூக்கணும்... " சொல்லிக் கொண்டே திரும்பிப் படுத்தார். 

Comments