எட்டாக் கனி

எட்டாக்கனி

கிராமமே அவளைப் பார்க்கத் திரண்டிருந்தது. 

பின்னே சும்மாவா. இன்று வரை தனக்கென ஒரு பேருந்து நிறுத்தம் கூட இல்லாத அந்த கிராமத்தில் ஏறத்தாழ  முப்பது வருடங்கள் முன் பிறந்த அவள் , இன்று சாதாரண லாவண்யாவாக இல்லாமல் கலெக்டர் லாவண்யாவாக அல்லவா திரும்பி வந்திருக்கிறாள். 

அவளை வளர்த்த மாமி வீட்டிற்குத் தான் அவள் வந்திருந்தாள்.  மாமி ஆரத்தி எடுக்க , வீட்டிற்குள் நுழைந்த அவளை  ஒவ்வொருவராக வந்து நலம் விசாரித்தபடி இருந்தனர். 

"ஏம்மா.. வர்றவங்க கூட பேசிக்கிட்டே சாப்பிடும்மா... பசிக்க போவுது"

நெய் மணக்க சூடான பொங்கலை சட்னியோடு வைத்துத் தட்டை நீட்டினாள் மாமி. 

கையில் லாவண்யா வாங்க, "இன்னிக்கு மார்கழி மாத பிறப்பும்மா... அதன் பொங்கல் பண்ணேன். சாப்பிட்டுப் பாரு. மிளகு காரத்தோட மார்கழி குளிருக்கு நல்லது. " மாமி சொல்ல, அந்த சூடான பொங்கலை வாயில் அள்ளி  போட்ட லாவண்யாவின் மனம் பின்னோக்கி ஓடியது.


* * * * * 

குடிகாரக் கணவனுக்கு வாழ்க்கைப்பட்ட அவள் தாய் விபத்தில் திடீரென இறந்து, தந்தை எங்கேயோ போய்விட, அவள் அனாதையாக தெருவில் நின்ற போது அவளுக்கு வயது பத்து. மற்ற சொந்தங்கள் கைவிட்டு விட, இந்த மாமி தான் அவளைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று பார்த்துக் கொண்டாள். மாமியின் பிள்ளைகள் படித்து வெளியூரில் வேலை செய்து கொண்டிருந்தனர். ஆகவே அவர்கள் வீட்டில் மாமி, மாமாவோடு இவள் மட்டுமே இப்போதைக்கு.

"கலெக்டர் ஆக வேண்டும்" - இந்த கனவு அவளுக்கு சொந்தமாக வந்ததா, இல்லை , அம்மா தினம் உணவோடு தனக்கு அந்த கனவையும் ஊட்டி விட்டாளா  - இன்று வரை அவளுக்குத் தெரியவில்லை. ஆனால் அந்த  கனவு மட்டும் அவள் மனதில் நாளொரு மேனியாக வளர்ந்து கொண்டே இருந்தது. அம்மா இறந்து மாமி வீட்டிற்கு இவள் வந்த பின்னும் அது அவளை விட்டு விலகவில்லை.

செலவானாலும் பரவாயில்லை என்று நல்ல மனம் படைத்த மாமனும் மாமியும் இவளைத் தங்கள் பிள்ளைகள் படித்த தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தனர்.  பல பணக்கார மாணவிகளுக்கு நடுவில் இவளது எளிமையான தோற்றமும், அமைதியான குணமும் மிகவும் கேலிக்குரியதாகவே இருந்தது. பல துன்பங்களை வாழ்வில் ஏற்கெனவே அனுபவித்திருந்த அவளுக்கு கிண்டல்கள் ஒன்றும் பெரியதாகப் படவில்லை.


* * * * * 

அந்த நாள்...

வழக்கம் போல் பள்ளிக்கு லாவண்யா நேரத்திற்கு சற்று முன்னதாகவே சென்றிருந்தாள். ஏற்கெனவே அங்கு இருந்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்த மாணவியர் சிலர் இவளைக் கண்டு பேச்சு கொடுத்தனர்.

"ஏய் லாவண்யா... என்ன பண்ணிக்கிட்டு இருக்க... இங்கே வா எங்களோடு வந்து உட்காரு", ஒருத்தி அழைக்க, இவளும் அங்கு சென்று அமர்ந்தாள். 

"வீடு எங்கே? " என்று ஆரம்பித்து, எங்கெங்கோ சுற்றிய பேச்சில் லாவண்யா தன் பெற்றோரை இழந்தது முதல் மாமியோடு வசிப்பது வரை மெல்ல சொல்லி முடித்தாள். அவர்கள் அவள் நிலை கண்டு பரிதாபப்பட்டது அவர்கள் முகத்தில் வெளிப்படையாகத்  தெரிந்தது.


மெதுவாக கேட்டுக் கொண்டிருந்த மாணவியரில் ஒருத்தி ஆறுதலாக சொன்னாள், "நீ கவலைப்படாதே லாவண்யா. பத்தாவது முடிச்சுட்டு ஒரு நல்ல பையனா பாத்து கல்யாணம் பண்ணிக்கிட்டா உனக்குன்னு குடும்பம் வந்துரும். அதுக்கு அப்புறம் என்ன? சந்தோசமா வாழலாமே"

சுற்றி இருந்த பெண்களும் ஆமோதிப்பாக புன்னகைத்தனர்.

"ஐயோ... நான் கலெக்டர் ஆவணும்", இவள் கூவ, அவர்கள் இவளை ஆச்சரியமாகப் பார்த்தனர்.

"கலெக்டரா... அதெல்லாம் பெரிய படிப்பு புள்ள"

"ஆமா... நான் படிக்கப் போறேன்", பதிலளித்தாள் லாவண்யா.

அவளை மற்ற பெண்கள் விநோதமாகப் பார்த்த நேரம் மணி அடிக்க ஒவ்வொருவரும் தத்தம் இடங்களுக்கு சென்றனர்.

* * * * *

இந்தப் பேச்சு அன்றோடு முடியவில்லை.  அந்தப் பெண்கள், இந்த விவரங்களை வகுப்பு முழுவதும் சொல்ல, அது மெல்ல பள்ளிக்கூடம் முழுவதும் பரவியது.  "கலெக்டரம்மா" என்பது அவளது பட்டப் பெயரானது. "அம்மா கலெக்டர் ஆவ போறாங்களாமா" என்பது வழக்கமான சீண்டலானது. தன் நிலை கண்டு பரிதாபப்பட்டவர்களைக் கூட தன் லட்சியம் கேலி செய்பவர்களாக மாற்றி விட்டது அவளுக்கு புரியாத புதிராகவே இருந்தது.

ஒரு நாள் இத்தகைய கேலிகளை அவள் முன்னிலையிலேயே சில மாணவியர் செய்ய, அவள் கண்டு கொள்ளாமல் அமைதியாகவே இருந்தாள். உச்சகட்டமாக ஒருத்தி, "முதல்ல வகுப்புல பத்து ரேங்கு-குள்ள வர பாருங்க கலெக்டர் அம்மா...  அப்புறம் கலெக்டர் படிப்பு படிக்கலாம் ... பேராசைக்காரி..." கிண்டலாக சொல்ல, வகுப்பே சிரிப்பில் அலறியது. 

மேலும் தொடர்ந்து, "ஏதோ கலெக்டர் ஆபீஸ்ல வேலை வேணும்னு ஆசைப்பட்டா பரவாயில்லை. கலெக்டர் வேலையே வேணுமாம்ல." என்று சொல்ல, லாவண்யாவின் கண்ணில் மெல்ல நீர் கோர்த்தது.

அன்று மாலை வீட்டிற்கு சென்ற பிறகும் அவள் இதையே சிந்தித்தவாறு இருந்தாள்


"நான் ஒன்றும் பெரிய படிப்பாளி எல்லாம் இல்லை. ஆனா எப்போவும் செய்தித்தாள்கள் படித்து நாட்டு நடப்புகளை சரியா தெரிஞ்சுப்பேன். பொது அறிவு வளர எப்போவும் புத்தகங்கள் படிப்பேன். கடுமையான உழைப்புக்குக் கிடைத்த பரிசு தான் இந்த கலெக்டர் பதவி", எப்போதோ ஒரு முறை பார்த்த கலெக்டர் ஒருவரின் பேட்டி இவள் நெஞ்சில் ஓடியது.

"அவரு அப்படி சொல்றார். ஆனா இவங்க எல்லாம் அப்படியே எதிர்மறையா இல்ல சொல்றாங்க!! ஆனால், அவர்கள் சொல்வதும் சரி தானே... 10 ரேங்க் கூட வாங்க முடியாதவள் எப்படி கலெக்டர் எல்லாம் ஆவது. நான் தான் தேவையின்றி கனவு கண்டு வானத்தில் பறக்க ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறேனா?", அவள் யோசித்தபடி படுத்திருக்க, அருகே வந்த மாமி, "என்னடா தங்கம்... சோர்வா இருக்க.. உடம்பு சரி இல்லையா? " என்று  ஆதரவாக கேட்டபடி, கழுத்தை தொட்டுப் பார்த்து, சூடு தெரியவில்லை எனவும், "சரி... கோவிலிலே  இன்னிக்கு ஏதோ சொற்பொழிவாம். போய் கேட்டுட்டு வா.மனம் ஆறுதல் அடையும்" என்று சொல்ல, அவளும் மெல்ல எழுந்து முகம் கழுவி, கோவிலை நோக்கி நடந்தாள்.

 மெல்ல அமர்ந்து  முழு சொற்பொழிவையும் கேட்டாள். ஆண்டாள் கதையாம். கேட்டு விட்டு வீட்டிற்கு வந்து அசதியுடன் படுத்தாள்.

* * * * * 

அதிகாலையில் ஏதோ சத்தம் கேட்டு  கூடத்தில் படுத்திருந்த லாவண்யா விழித்தாள். ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தால், ஒரு பெண் மெதுவாக ஏதோ பக்திப்பாட்டைப் பாடியபடி நடந்து கொண்டிருந்தாள். மாமி தூங்கிக் கொண்டிருக்க, அவரை எழுப்ப மனமின்றி, ஏதோ ஒரு உந்துதலில் லாவண்யா அந்தப் பெண்ணைப் பின்தொடர்ந்தாள். 

இவள் பின்னால் வருவதையே கவனிக்காமல் அந்தப் பெண் தொடர்ந்து சென்று கொண்டிருந்தாள். அருகில் இருந்த வீட்டின் வாசலில் மெல்ல நின்று பாட்டைத் தொடர்ந்தாள். சில நொடிகளில் வேறு ஒரு பெண்ணும் அவளோடு சேர்ந்து கொண்டாள். இப்படியே ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு பெண் இவளோடு சேர்ந்து கொண்டனர். 

அவர்களைப் பின்தொடர்ந்தபடி சென்ற லாவண்யா காதில் ஒரு வீட்டுக்குள்  அந்த பெண்ணைப் பற்றிப் பேசுவது கேட்டது. 

" கோதையும் பாவம் தினமும் வந்துடறா நேரத்துக்கு.. என் மகள் ஒரு நாளைப் போல அவள் வந்து வாசலிலே அழைத்த பிறகு தான் எழுந்துக்கறா.. பாவை விரதம் இருக்குறது நல்லது தானேன்னு தான் நானும் என் பெண்ணை அனுப்புகிறேன்."

கோதை என்பது அந்தப் பெண்ணின் பெயர் என்று லாவண்யா  புரிந்து கொண்டாள். உள்ளே பேச்சுக் குரல் தொடர்ந்தது.

"ஆமாம் ஆமாம். கோதை நல்ல பொண்ணு தான் . நோன்பைக் கூட இவ்வளவு சிரத்தையா  செய்யறாளே. என்ன இருந்து என்ன... கடவுள் கண்ணனைத் தான் திருமணம் செய்வேன்-னுஅடம் பிடிக்கறாளாம். என்னவோ இந்த விரதத்துலயாவது அவள் மனம் தெளிஞ்சா சரி.  இவ்வளவு அழகா பாட்டு பாடற குழந்தையை இப்படி கடவுள் சித்த ப்ரம்மையா பண்ணிருக்க வேண்டாம். "

"சரி தான். அவள் அப்பா பக்திக்காகவாவது கடவுள் கண்ணைத் திறந்தால் இவளுக்கு ஒரு நல்வழி பிறக்கும்"

ஒவ்வொரு வீடாக அந்த பெண் செல்ல, லாவண்யா தொடர்ந்து சென்றாள். பல வீடுகளில் இதே போல குரல் கேட்டது. 

" என்ன தான் இருந்தாலும் பேராசைக்கு ஒரு அளவு வேண்டாமா? கண்ணன் போல கணவன் வேண்டும் எனக் கேட்கலாம்.. கண்ணனையே வேணும்னு கேப்பாளோ?",  யாரோ குத்தலாகப் பேசினார்கள்.. அந்த பெண் காதிலும் இவை எல்லாம் கேட்டிருக்க வேண்டும். ஆனால் அவள் சலனமடைந்ததாகவே தெரியவில்லை. 

ஒரு தெருவின் ஓரத்தில் அந்த பெண்ணைப் பார்த்தபடி ஒரு பெரியவர் கண்ணீர் உகுத்துக் கொண்டிருந்தார், " கண்ணா கண்ணா.. உன்னை தினமும் தொழும் என் பெண்ணை உன் மீதே பித்தாக்கி அலைய விடுகிறாயே!!!"

கோதையின் தந்தை அவர் என்பதை லாவண்யா உணர்ந்தாள். லாவண்யா மனம் கோதைக்காக உருகியது.

கோதையோ எங்கும் நிற்காமல், தன் போக்கில் பாடல்கள் பாடியபடி  கோவிலுக்குள் செல்ல , லாவண்யா பின்தொடர்ந்து கோவிலுக்குள் சென்றாள்.

பாட்டு பாடியபடி மெல்ல கண்ணன் சந்நிதியை நோக்கி கோதை செல்ல, அங்கு கண்ணன் தோன்றி கோதை கழுத்தில் மாலையிட்டார். தன்னை அறியாமல் கை கூப்பிய லாவண்யா, தன்னைச் சுற்றி ஒரு பெரும் கூட்டமே நின்று அந்தப் பெண்ணையும் கண்ணனையும் கை கூப்பித் தொழுவதைக் கண்டாள். புறம் பேசிய பெண்கள், கோதையுடன் விரதத்திற்கு நடந்த பெண்கள், ஏன் .. தெரு ஓரம் அழுத கோதையின் தந்தை கூட அந்தக் கூட்டத்தில் இருந்தார். லாவண்யாவின் மனம் நெகிழ்ந்தது. 
ஆனந்தக் கண்ணீருடன் லாவண்யா கோதையை நோக்க, கண்ணன் அருகில் பெருமை பொங்க நின்ற கோதை லாவண்யாவை நோக்கிச் சொன்னாள், "பெரிய லட்சியங்களைக் கொண்ட எவரையும் உலகம் கேலியும் கிண்டலும் தான் செய்யும்... இதோ ஒரு துளசி மாடத்தில் கேட்பாரின்றிக் கிடந்த நான், கண்ணனைத் திருமணம் செய்வேன் என்ற என் உறுதி கண்டு ஊரே புறம் பேசிய நான் - இன்று உலகிற்கே தாய். ஊர் போற்றும் தெய்வம். எட்டாக்கனி என ஊர் எள்ளி நகையாடும் ஒவ்வொரு லட்சியமும் எட்டக் கூடியதே என்பதை என் வாழ்க்கை என்றென்றும் சொல்லிக் கொண்டு இருக்கும்.என் வாழ்வையே பாடமாக்கி, கொண்ட லட்சியத்தை விடாமல் முயன்று, வென்று வாழ்க. " அவளும் கண்ணனும் வாழ்த்தினர். கோதை தலையில் இருந்த பவழமல்லியின் வாசம் லாவண்யாவின் நாசியை பலமாகத் தாக்கியது. 

கண்ணை மூடித் திறந்த லாவண்யா தன் வீட்டில் படுத்துக் கிடப்பதை உணர்ந்தாள். பவழமல்லியின் வாசம் தவிர மற்ற அனைத்தும் மறைந்திருந்தது.

"ஏம்மா லாவண்யா... எழுந்து பல் விளக்கிட்டு, பவழமல்லியைத் தொடுக்க ஆரம்பிம்மா. " - மாமியின் குரல் கேட்டு தான் கண்டதனைத்தும் கனவு என்பதை உணர்ந்தாள். 

* * * * 
பூவைத் தொடுத்துக் கொண்டே அவள் கனவில் வந்த கோதையின் வார்த்தைகளை எண்ணிப் பார்த்தாள். அந்த எண்ணத்தை வாழ்க்கை ஆக்கினாள். எல்லாவற்றையும் ஒதுக்கி கலெக்டர் ஆக வாழ்வை அர்ப்பணித்தாள்.  இதோ இன்று எட்டாக்கனி என்று ஊர் பேசிய அந்த கலெக்டர் பதவியை அடைந்தும் விட்டாள். எள்ளி நகையாடிய ஊரே இன்று போற்றிப் புகழ்ந்தது.

"யம்மா... என்ன யோசிச்சிக்கிட்டே உக்காந்துருக்க.. பொங்கல் ஆறுதும்மா... சாப்பிடு...", மாமா சொல்வதைக் கேட்டு நிகழ்காலத்திற்குத் திரும்பிய அவள் காதுகளில் மாமி சொல்லிக் கொண்டிருந்த திருப்பாவையின் வரிகள் கேட்டன.

"...உமக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்"

கண்களை மூடி ஆண்டாளை வணங்கினாள் லாவண்யா IAS.






உங்களுக்கு இந்தக் கதை பிடித்திருந்தால், அடுத்து வரும் கதைகள் பற்றி அறிய : Vetti Vaayan / வெட்டி வாயன்  என்ற முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Comments

  1. Wow.. you have shown a very positive perspective to the puranic story. Very nice!!

    ReplyDelete

Post a Comment