கோமாளி

அந்த சர்க்கஸ்சில் பஃபூன் (கோமாளி) வித்தை தான் மிக பிரசித்தம். அதைக் காணவே பல மக்கள் குழந்தைகளை அழைத்து வருவார்கள்.

அன்று சனிக்கிழமை வேறு என்பதால் கூட்டம் எப்போதும் விட சற்று அதிகம். சர்க்கஸ் களை கட்டிக் கொண்டிருந்தது.  அரங்கு நிறைந்து வித்தைகள் ஆரம்பித்தன.

ஆரம்பித்த சிறிது நேரத்தில் பல குழந்தைகள் அழத் துவங்கினர். அந்தக் குழந்தையும் அழத் துவங்கியது. அவளது அம்மா சமாதானம் செய்ய முயன்றாள். ஆனால் அந்த குழந்தை சமாதானமடையவில்லை. அருகில் இருந்து அதைப் பார்த்த வாணி,  தன் கையிலிருந்த  மிட்டாயை அந்த குழந்தையிடம் நீட்டினாள். அந்த குழந்தை அழுகையை நிறுத்தி அதை வாங்கிக் கொண்டது. அந்த தாய் "உங்க குழந்தை பரவாயில்லை. அழவில்லை. சிரித்துக் கொண்டு தான் இருக்கிறாள். நல்ல பிள்ளை" வாணியின் மகளைப் பார்த்து அந்த பெண் சொல்ல அவள் பதிலுக்கு சிரித்தாள்.



அனைத்து வித்தைகளும் முடிந்து இறுதியாக பஃபூன் ஷோ துவங்கியது. பெற்றோர் பலர் தூங்கிய குழந்தைகளை எழுப்பிக் காட்டினார். அழுத குழந்தைகள் கூட அழுகையை நிறுத்தி விட்டு ஆர்வமாக பார்த்து கை தட்டினர். வித்தை அருமையாக இருந்தது. துவங்கிய சிறிது நேரம் சிரிப்புடன் பார்த்த வாணியின் மகள்,  திடீரென உரக்க அழத் துவங்கினாள். ஒரு கட்டத்தில்  ஓடவும் முயற்சித்ததால், வாணி மகளைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்து அவளை சமாதானம் செய்தாள்.

சிறிது நேரத்தில் சர்க்கஸ் ஷோ முடிய அனைவரும் வெளியே வந்தனர். மகளுடன் வெளியே வந்த அந்த பெண் வாணியை புன்சிரிப்புடன் பார்த்து, "என்ன அக்கா ஆச்சு, கடைசில பஃபூன் ஷோ பாக்க முடியாம போச்சே. ரொம்ப நல்லா இருந்துச்சு. என்ன ஆச்சு குழந்தைக்கு? முதல்ல எல்லாம் சமத்தா இருந்தவ, எல்லாரும் சந்தோசமா பஃபூன் ஷோ பாக்கும் போது திடீர்னு அழ ஆரம்பிச்சிட்டா?" அந்த பெண் கேட்க வாணி புன்சிரிப்புடன் பதிலளித்தாள்

" அவரு திடீர்னு உயரத்துலேர்ந்து குதிச்சதும் பயந்துட்டா.  அது அவங்க அப்பா"

* * * * * 
உங்களுக்கு இந்தக் கதை பிடித்திருந்தால், அடுத்து வரும் கதைகள் பற்றி அறிய : Vetti Vaayan / வெட்டி வாயன்  என்ற முகநூல் பக்கத்தை பின்தொடரவும்

Comments