வெளியே போங்கடா அயோக்கிய ராஸ்க்கல்களா !!


"தயவு செய்து ரூமை விட்டுப் போங்கடா.. எப்ப பாரு தம், தண்ணின்னு ரூமை நாசம் பண்றீங்க ரெண்டு பேரும். என்னால இதுக்கு மேல தாங்க முடியாது. மரியாதையா காலி பண்ணிட்டு வெளியே போய்டுங்க" , தன் ரூம்மேட்களைப் பார்த்துக் கத்தினான் விஜய்.  அவர்கள் மூவரும் ஒரு பிளாட்டில் சேர்ந்து வசித்த ஐ.டி பணியாளர்கள்.


"இதோடா,  நீ மொதல்ல ரூமுக்கு வந்துட்ட, நாங்க அப்புறம் தான் வந்தோம்... அதுக்காக ஏதோ நீ தான் பிளாட் ஓனர் மாதிரி நடந்துக்காத. உனக்கு இங்க இருக்க மாதிரியே எங்களுக்கும் எல்லா உரிமையும் இருக்கு. எது எப்படியோ, உன்னை மாதிரி ஒரு அம்மாஞ்சி லூசோட நாங்க இனியும் இருக்க விரும்பல. அதுனால வேற இடத்துக்கு போயிடறோம். ஆனா ஒண்ணு. நாங்க இல்லாம தனியா இருக்க முடியாம, சீக்கிரத்துல நீயே எங்ககிட்ட வந்து, 'திரும்பி வாங்க மச்சி'ன்னு வந்து நிப்ப.. அப்போ பேசிக்கறோம்", அவர்களில் ஒருவன் பதிலுக்குக் கத்தினான்.

"போய்த்  தொலைங்க. நான் சாயந்திரம் வேலை விட்டு திரும்பி வரும் போது நீங்க ரெண்டு பேரும் இங்கே இருக்க கூடாது.புரியுதா? " விஜய் கத்தி விட்டு, கதவை அறைந்து சார்த்தியபடி வீட்டை விட்டு வெளியேறினான்.

* * * * *

மாலை அவன் வீடு திரும்பிய போது  அவர்கள் அங்கு இல்லை. தன் தனிமை குறித்த கவலையையைக் காட்டிலும் அவனுக்கு அவர்கள் வெளியேறிய நிம்மதியே மேலோங்கி நின்றது.

நள்ளிரவு வரையில் அவன் அவர்கள் விட்டு சென்ற சிகரெட் துண்டுகள்,  பீர் பாட்டில்கள் ஆகியவற்றை சுத்தம் செய்தான். அவை அனைத்தையும் தூக்கி குப்பையில் போட்டு விட்ட பின், அவன்பிளாட்டே மிக அழகானது போல உணர்ந்தான். நெடுநாள் கழித்து அன்று அவன் நிம்மதியாக உறங்கினான்.


மறுநாள் காலை, குளித்து அலுவலகம் கிளம்பிய போது, எதிர் வீட்டில் புதிதாக யாரோ ஒரு குடும்பம் குடி வந்திருப்பதைக் கண்டான். அவர்கள் பொருட்களை அடுக்கிக் கொண்டிருப்பதையும், அவர்களோடு குடியிருப்புக் காவலாளி பேசிக் கொண்டிருப்பதையும் பார்த்து, போகிற  போக்கில் காவலாளியை நோக்கி ஒரு புன்னகையை வீசிச் சென்றான். 

* * * * * 

புதிதாக குடி வந்திருந்த குடும்பத்தின் தலைவி, காவலாளியிடம் கேட்டாள், "இந்த பையன் எப்படி? எதுவும் பிரச்சனையை இல்லையே? மொத்தம் எத்தனை பேர் அந்த பிளாட்டில்? "

அவன் விஜய் போய் விட்டதை உறுதி செய்து கொண்டு சொன்னான், "ஆமாம் அம்மா. அவன் ஒரேய ஆள் தான். ஏறக்குறைய ஒரு வருஷமா அந்த பிளாட்ல தனியா தான் இருக்கான். கொஞ்சம் கெட்ட பழக்கங்கள் உண்டு. அப்புறம் அப்பப்போ தனியா பிளாட்டுக்குள்ள கத்திக்கிட்டு இருப்பான். மத்தபடி நமக்கு எந்த தொந்தரவும் செய்ய மாட்டான். பிரச்சனையை இல்லாத ஆள் தான்".


* * * * * 


புரியாதவர்களுக்கு பி.கு : விஜய் Split Personality (அந்நியன் திரைப்படம் போல) பாதிப்பு உடையவன்.

உங்களுக்கு இந்தக் கதை பிடித்திருந்தால், அடுத்து வரும் கதைகள் பற்றி அறிய : Vetti Vaayan / வெட்டி வாயன்  என்ற முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.



Comments