அவள் வருவாளா !!!


அன்று வெள்ளிக்கிழமை. தன் சொந்த ஊரான கோவைக்குச் செல்லும் நீலகிரி விரைவு ரயிலில் ஏற அவன் நடைமேடையில் காத்திருந்த சமயம் அவனுக்குள் அவளைப் பற்றிய நினைவுகள் உருண்டோடின.

அவள் தன் வாழ்வில் நுழைந்த பின் தான் எத்தனை எத்தனை மாற்றம்…

"உன்னைக் கரம் பிடித்தேன்.. வாழ்க்கை ஒளி மயம் ஆனதடி …
உன்னை மணந்ததனால் சபையில் புகழும் உயர்ந்ததடி.."

ஏதோ பழைய பாட்டின் வரிகள் அவன் நெஞ்சில் இழையோடியது.

ஆம். அவள் வந்த பின் தான் அவனுக்கு வீட்டிலும், உறவிலும், நட்பிலும் மரியாதையே வந்தது.
ஆனால் அது மட்டுமா.... குடும்ப பாரத்தின் வலி அவள் வந்த பிறகு தான் அவனுக்கு உறைக்கத் துவங்கி இருந்தது.

அது வரை சிரிப்பாக 'இவர் கஞ்சன்" என்று பார்த்து வந்த தந்தை, "எத்தனை பொறுப்பானவர்" என்று அவன் உணரத் துவங்கினான். வாழ்க்கையின் கஷ்டங்கள் அவனுக்கு உரைக்கத் துவங்கியதால், அத்தனை கஷ்டங்களோடு, கஷ்டம் தெரியாமல் தன்னை வளர்த்த பெற்றோர் மீது அவனுக்கு மரியாதை அதிகரித்தது. இந்த மாற்றம் பொறுப்பான மனிதனாக அவனை மாற்றியது.

அவனது பொறுப்பு அவனுக்கு மரியாதையைப் பெற்றுத் தந்தது. அது வரை ஏதோ குழந்தையாகக் கருதி வந்த பெற்றோரும் அவனிடம் வீட்டுப் பிரச்சனைகளை சொல்லி ஆலோசனை கேட்டனர். அவனுக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. குடும்பத்தை இனி தான் கஷ்டமின்றி பார்த்துக் கொள்ள வேண்டும் என அவன் முடிவு செய்தான்.


"என்னடா இப்போ எல்லாம் ஆளே மாறிட்ட" கேட்காத ஆளே இல்லை. அவனுக்கே அவன் பெரிய மனிதன் ஆகி விட்டது போல ஒரு தோற்றம்.

எல்லாம் அவள் வந்த நேரம்...

"இதோ இன்னும் சிறிது நேரத்தில் அவள் வந்து விடுவாள். அவளோடு ஊருக்குப் போகலாம். குடும்பமே சந்தோஷப்படும்." நினைத்தபடி அவன் காத்திருந்தான்.

ஒவ்வொரு முறையும் அவள் வரும் நாளுக்கு ஒரு வாரம் முன்பே அவனுக்குப் பரபரப்பு தொற்றி விடும்.  எப்போது வருவாள் என அவன் ஏங்கத் துவங்கி விடுவான்.

நான்கு நாள் முன்பிருந்து நாட்களை எண்ணத் துவங்கி விடுவான். ஏறத்தாழ அந்த நாட்கள் ஒரு தவம் போல ஏக்கத்துடன் கழியும். கிட்டத்தட்ட "சூர்ய வம்சம்" சரத்குமார் நிலைமை தான்.

"கோவை செல்லும் நீலகிரி விரைவு வண்டி 3ஆவது நடை மேடையில் இருந்து இன்னும் 5 நிமிடத்தில் புறப்படும்.", அறிவிப்பு ஒலிக்க, "என்ன அவளை இன்னும் காணோம்" என அவன் எண்ணிய நொடி, தொலைபேசி ஒலித்தது.

"அட.. வந்துட்டியா.. உனக்காக எவ்ளோ நேரம் காத்திருக்கிறது" மெதுவாக சொல்லியபடி, அலைபேசியில் அந்த குறுஞ்செய்தியை முத்தமிட்டான்.

"உங்கள் இந்த மாத சம்பளத் தொகை ரூபாய் இருபதாயிரம் உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது."


 * * * * * 

உங்களுக்கு இந்தக் கதை பிடித்திருந்தால், அடுத்து வரும் கதைகள் பற்றி அறிய : Vetti Vaayan / வெட்டி வாயன் என்ற முகநூல் பக்கத்தை பின்தொடரவும்

Comments

Post a Comment