"ஒரு சென்ட் விட்டு போச்சு"
தன் கையில் இருந்த நாணயத்தைக் காட்டி ரவி கலைவாணனிடம் சொன்னான். ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஐரோப்பாவில் கை கொள்ளாமல் சம்பாதித்தவன். பெற்றோர் தென்காசி அருகே அண்ணனுடன் இருக்க, சில ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊருக்கு செல்வதையும், வயலில் இருந்து வரும் வருமானத்தை பங்கு கேட்டு பெறுவதும் தவிர பெரியதாய் அவர்களுடன் அவனுக்கு ஓட்டுதல் இல்லை.
அவன் ஐரோப்பியாவில் இருந்து இந்த முறை வந்தது இனி இங்கேயே இருந்து விடலாம் என்ற எண்ணத்தோடு. ஐரோப்பாவின் பரபரப்பு அவனுக்கு லேசாக சலிக்க துவங்கி இருந்த சமயம் அது..
திரும்ப செல்லவேண்டிய வேலை இல்லாததால் அவனிடம் இருந்த ஐரோப்பிய காசுகள் அனைத்தையும் திருப்பி கொடுத்து இந்திய பணமாக மாற்றி இருந்தான். அதில் தான் ஒரு யூரோ சென்ட் விட்டு போயிருந்தது. அவனுடைய சட்டை பையில் இருந்த அதனுடன் சில இந்திய நாணயங்கள் இருந்ததால் அவற்றுடன் அதையும் மாற்றாமல் விட்டு விட்டான்.
சென்ட் ஐரோப்பாவின் பொடி சில்லறை காசு. ஏறத்தாழ முக்கால் ருபாய் மதிப்பு கொண்டது ஒரு யூரோ சென்ட். வெளிநாடு செல்லும் பலருக்கும் தொற்றிக் கொள்ளும் பிசுநாரித்தனம் அவனிடம் சற்று கூடுதலாகவே இருந்ததால் அவனுக்கு அந்த சிறிய நஷ்டம் பெரிதாக தோன்றியது. அதை பற்றி கலைவாணனிடம் வருத்தப்பட்டு கொண்டிருந்தான். அவன் குணம் தெரிந்த கலையும் அதனை அமைதியாக கேட்டு கொண்டிருந்தான்.
எவ்வளவோ காசு இருந்தும் அவனுக்கு இந்த ஒரு சென்டை எப்படியாவது மாற்ற வேண்டும் என்று ஒரு வேகம் வந்தது. " இதை எப்படியாவது தள்ளி விட்டு விட வேண்டும். " ரவி சிந்தித்தான்.
"சரி வாடா.... போய் டீ குடிப்போம் "ரவி சொல்ல, தான் தான் காசு தர வேண்டும் என்ற தெளிவோடு கலைவாணனும் தலையசைத்தான். எவ்வளவு சம்பாதித்தாலும் ரவி ஒரு பைசா பையிலிருந்து எடுக்க மாட்டான்.
2 தேநீர், 2 வடை, 1 பிஸ்கட் - 23 ருபாய் ஆனது.தன் பையிலிருந்து இருபது ருபாய் நோட்டை எடுத்து விட்டு கலைவாணன் சில்லறை தேட, "இருடா. நான் தர்றேன்" என்று 3 ருபாய் சில்லறையை நீட்டிய ரவியை கலை ஆச்சரியத்துடன் நோக்கினான். அவனைப் பொறுத்த வரை இவன் 3 ருபாய் எடுத்து கொடுத்ததே பெரிய அதிசயம் தான். கடைக்காரர் விரைவாக சில்லறையை கல்லாவில் போட்டு விட்டு அடுத்த வேலையை பார்த்தார்.
மேலும் சிறிது நேரம் கலைவாணனுடன் பேசி விட்டு ரவி தென்காசிக்கு சென்றான். அங்கு வீட்டில் உண்டு, உறங்கி, வயல் கணக்குகள் கேட்டு பணத்தை வாங்கி கொண்டு அருகில் இருந்த ஒரு கிராமத்தில் திருவிழா நடப்பதை கேட்டறிந்து அவன் அங்கு போக தீர்மானித்தான்.
*****
அது ஒரு சிறிய ஆனால் அழகான கிராமமாக இருந்தது. ஊருக்குள் நுழையும் போதே அழகான கண்மாய் வரவேற்றது. வீசிய மெல்லிய தென்றலை அனுபவித்தபடி மேலும் நடந்தான். அது ஒன்பது நாள் திருவிழா. ஊரே விழாக்கோலம் பூண்டு கலகலப்பாக இருந்தது.
"சார் சார் " யாரோ அழைத்த குரலைக் கேட்டு திரும்பினான்.
"உங்களோட வாழ்க்கைல முக்கியமான கட்டத்துல இருக்கீங்க. கை ரேகை பார்த்தால் புட்டு புட்டு வெச்சிடுவேன்" அவன் ஆர்வத்தை தூண்டினான். தொடர்ந்து "ஒரு சகுனம் சொல்றேன். இன்னிக்கு உங்க கண்ணுல நல்ல தண்ணீர் பட்டிருக்கும் - குளமோ இல்ல ஏரியோ ஏதோ ஒன்று. அது உங்களுக்கு சொல்ல வரும் சேதியை நான் ரேகை பார்த்து சொல்றேன் " . முழு நம்பிக்கை இல்லாவிட்டாலும் "என்ன தான் சொல்கிறான் என கேட்போமே. " என்று எண்ணியபடி, "சரி சொல்லுங்க" என்றான். ஊருக்குள் நுழையும் யாரும் அந்த கண்மாயை பார்க்காமல் வர முடியாது என்பது அப்போது ரவிக்கு தோன்றவில்லை.
அங்கிருந்த ஒரு ஆலமரத்தின் அடியில் அமர்ந்து அவன் ரவியின் கை ரேகையை ஆராயத் துவங்கினான்.
"சார். நான் எதுவும் கற்பனை பண்ணி சொல்லல. நான் மூணு தலைமுறையா தொழில் பண்றவன். நாணயம் எனக்கு ரொம்ப முக்கியம். உள்ளதை சொல்றேன் கேட்டுக்கோங்க. கேட்டுட்டு நீங்களா பாத்து குடுக்குறத குடுங்க. கடும் உழைப்பால பல கஷ்டங்களை தாண்டி உயர்ந்தவர் நீங்க. " அவன் சொன்ன முதல் வரியே இவனை முழுக்க நம்ப வைத்தது. "நீங்க இங்க வந்த நேரம் உங்களுக்கு ரொம்ப நல்ல நேரம். லட்சுமி உங்களை தேடி வரும் நேரம். அதிர்ஷ்டம் உங்களை தேடி வந்து பொன்மழை கொட்டும். உங்களை வாழ்க்கையில் பெரிய இடத்துக்கு கொண்டு போகும். உங்களுக்கு இனி நல்ல நேரம் இருக்குறது தெளிவா தெரியுது. கிடைக்கற வாய்ப்பை தவற விடாதீங்க. லட்சுமி என்னிக்காவது தான் கதவை தட்டுவா. சாந்தி சாந்தி சாந்தி ஓம் " அவன் சொல்லி முடித்தான்.கையில் இருந்த பணத்தில் 20 ருபாய் அவனுக்கு கொடுத்து விட்டு ரவி நகர்ந்தான். அவன் வாங்கி கொண்டு கை கூப்பி விலகினான்.
*****
ரவி அப்படியே போய் அய்யனார் கோவில், அருகே இருந்த ஒரு பெருமாள் கோவில் இரண்டையும் பார்த்து விட்டு, அங்கு கொடுத்த பொங்கலை தின்று விட்டு, அப்படியே சிறிது நேரம் அருகில் இருந்த மரத்தில் சாய்ந்து அமர்ந்தான். அருகில் ஒருவர் துண்டை வீசியபடி வந்து அமர்ந்தார்.
"வெய்யில் மண்டைய பொளக்குது " சொல்லியபடியே அமர்ந்தார்.
அவன் புன்னகைத்தான். "ஆமாம். ஆலமரம் இருக்குறதால இங்க அவ்வளவா தெரியல " சொன்னான்.
அவர் முகம் வாட்டமாய் இருப்பதை பார்த்து "என்ன ஆச்சு. திருவிழா நாள்ல கவலையா இருக்கீங்க?" யதார்த்தமாக ரவி கேட்க அவர் பேச துவங்கினார்.
"ஒரே பொண்ணு தம்பி. ரொம்ப நாள் கழிச்சு இப்போ தான் வரன் அமைஞ்சிருக்கு. கல்யாணத்துக்கு ஒரு 5 லட்சம் செலவு. கையில தம்பிடி இல்ல இப்போ. ஒரு 3 சென்ட் நிலம் இருக்கு. வித்தால் 15 லட்சம் போவும். ஆனா இப்போ என் நிலைமையில 8 லட்சத்துக்கு கூட விக்க தயாரா இருக்கேன்."
"பொறவு என்ன.. வித்துட்டு நல்ல காரியத்தைப் பண்ண வேண்டியது தானே" பேசிய அவன் மனதில் அவர் பெண் எப்படி இருப்பாள் என்று கற்பனை ஓடியது.
"அட எங்க தம்பி. விக்கிறேன் னு தெரிஞ்சா அவனவன் எனக்கு எனக்கு -னு வருவான். ஆனா இந்த ஊருல முழு பணம் குடுத்து வாங்க யாரும் வர மாட்டாங்க. எல்லாரும் கடன் தான் சொல்லுவாங்க. உள்ளூர்ல இருந்துட்டு முடியாதுன்னும் சொல்ல முடியாது. எல்லாம் உறவு முறைங்க. தர்ம சங்கடமா இருக்கு. அய்யனாரப்பன் தான் வழியை காட்டணும் " அவர் வானத்தை அண்ணாந்து பார்த்தார்.
அவன் மனது விரைந்து லாபக் கணக்கை போட்டது. கை ரேகைக்காரன் வார்த்தைகள் அவன் மனதில் சினிமா ரீல் போல் ஓடின.
"அந்த நிலத்தை பார்க்கலாமா. பிடிச்சிருந்தா நானே வாங்கிக்கறேன்" அவன் சொன்னான்.
"எனக்கு மொத்த பணமும் கைல வேணும் தம்பி. அதுவும் உடனே வேணும். தருவீங்களா?" அவர் முகம் மலர்ந்ததை அவன் கவனித்தான்.
*****
"இது தான் தம்பி நிலம். இந்த ஊருல சென்ட் நிலம் 5 லட்சம் வரை போவுது. நான் அவசரத்துக்கு 3 லட்சத்துக்கு விற்க தயார். “ அவர் முகமலர்ச்சியோடு சொன்னார். இவன் வாங்கி விடுவான் என்று அவருக்கு நம்பிக்கை வந்து விட்டது.
அவன் பிடி கொடுக்காமல் பேசினான். "7 லட்சம் னா நான் உடனே குடுத்துருவேன். ஆனா 9 லட்சம் னு சொல்றிங்களே. அதான் யோசிக்க வேண்டியதா இருக்கு"
"யோசிச்சு பாருங்க தம்பி. ரொம்ப ராசியான நிலம். சரி ரெண்டு பேருக்கும் வேண்டாம். 8 லட்சத்துக்கு முடிச்சுக்குவோம். ஆனா எனக்கு கைல காசு வேணும்."
சற்று யோசிப்பது போல பாவனை செய்து விட்டு "சரி முடிச்சுக்குவோம்." என்று சொல்ல, அவர் மகிழ்ச்சி பொங்கும் முகத்தோடு "அப்போ சந்தோசம் தம்பி. நான் ஆகா வேண்டியதை பார்க்கிறேன் " என்கிறார்.
அடுத்தவருக்கு தெரிந்தால் அவன் இவன் என போட்டிக்கு வருவார்கள் என்ற அவர் வார்த்தைகளைக் கேட்டு அவனும் இது பற்றி வெளியில் பேசாது கவனமாயிருந்தான் . நிலம் வாங்கி விற்கும் வழிமுறைகள் ஓரளவு அவனுக்கு தெரிந்திருந்ததால் தானே பார்த்துக் கொள்ளலாம் என எண்ணினான்.
அவர் காட்டிய கோப்புகளை பார்த்தான். எல்லாம் சரியாகவே இருந்தது. அது அவர் நிலம் தான். அளவும் சரியாக குறிக்கப்பட்டு இருந்தது. அவன் மனம் மகிழ்ச்சி கொண்டது. அதிர்ஷ்ட மழை பெய்ய துவங்கி விட்டதை அவன் உணர்ந்தான். "நேரம் வந்தால் கூடி வரும்" என்பது உண்மை தான் என்று அவனுக்கு தோன்றியது.
*****
ஒரு வாரத்தில் மிக விரைவாக காரியங்கள் நடந்தேறின. ரிஜிஸ்டர் அலுவலகத்தில் இருந்து அவருக்கு தெரிந்தவர் ஒருவர் அவர் வீட்டிற்கே வந்து வேலைகளை முடித்து கொடுத்து விட்டு போனார். அரசு அலுவலகங்களில் கொடுக்க வேண்டிய லஞ்ச பணம் மிச்சமானது என அவன் மனம் குதூகலித்தது.
நிலத்தை விற்றவர் அவனை கை எடுத்து கும்பிட்டார். அவர் குடும்பமே "எங்களை தகுந்த நேரத்தில் காப்பாற்றினீர்கள்" என்று கொண்டாடியது. வாசல் வரை வந்து வழி அனுப்பியது. அவன் நெகிழ்ந்தான்.
*****
ஒரு மாதம் போயிருக்கும். "இந்த நிலத்தை வேறு ஒருவருக்கு விற்க என்ன செய்ய வேண்டும்" - விவரம் அறிய அவன் ரிஜிஸ்டர் ஆபீஸ் சென்று அவன் பேசியிருந்த அலுவலரை தேடினான். அவர் கண்ணில் படவில்லை.
"யாரு தம்பி என்ன வேணும் ..." அங்கிருந்த ஒருவர் கேட்க "நான் முனுசாமி சாரை பாக்க வந்துருக்கேன். அவருக்கு என்னை தெரியும்."
"ஒ.. சுருட்டை முடி முனுசாமி ஆ.. அவன் அலுவலர் இல்ல தம்பி. ப்ரோக்கர். என்ன விஷயம் சொல்லுங்க "
அவன் குழப்பத்துடன்"இந்த நிலம் போன மாசம் தான் வாங்குனேன். இதை விக்க என்ன ப்ரொசீஜர்னு தெரிஞ்சிட்டு போகலாம்-னு வந்தேன். அவரு எப்போ வேணா வாங்க தம்பி. நானே வித்து தர்றேன் னு சொன்னார்." அவன் கோப்புகளை நீட்டினான்.
வாங்கி பார்த்து சிரித்த அவர் "ஓ. அந்த இளிச்சவாயன் நீங்க தானா .. இதுல நடுவுல இருக்குற ஒரு சென்ட் நிலம் வழியா அரசாங்கம் ரோடு போட முடிவு செஞ்சிருக்கு. சரியான அனுமதிகள் இல்லாத நிலம். கேட்டால் கேட்ட விலைக்கு குடுக்க வேண்டி இருக்கும் . மொத்தத்துல உங்க நிலம் 2 சென்ட் தான் னு நெனச்சுக்கோங்க. ஒரு சென்ட் இங்க 3 லட்சம் போவுது. 6 லட்சத்துக்கு விக்கலாம். ஆனா பிரிஞ்சு கிடைக்கற 2 சென்ட் நிலத்தை விக்கிறது அவ்ளோ சுலபம் இல்ல. பிராடு பசங்க சார் அவனுங்க. நிலம் ராசின்னு சொல்ல ஜோஸ்யக்காரன் முதற்கொண்டு ஆள் புடிச்சு வெச்சிருப்பானுங்க. உங்களையும் சொல்லணும். முறையா எல்லாத்தையும் நீங்க செய்தால் உங்களை யாரு ஏமாத்த முடியும். பேராசை யாரை விட்டது" சொல்லியபடி அவர் நகர்ந்தார்.
சில நொடிகள் சிலையாக நின்ற அவன் ஊருக்குள் போய் தேடிய பொழுது எதிர்பார்த்தபடி நிலத்தை விற்றவர் வீடு பூட்டிக் கிடந்தது. முனுசாமியும் கண்ணில் படவில்லை.
*****
நெஞ்சோடிந்து அவன் ஊரை விட்டு கிளம்பிய போது அவன் கண்ணில் கண்மாய் பட்டது. அதன் கரையில் சில நொடிகள் அமர்ந்தபடி நீரில் தெரிந்த தன் பிம்பத்தை முறைத்தான்.
"3 சென்ட்டில் நடுவில் உள்ளது செல்லாதது " அவன் வாய் மீண்டும் மீண்டும் முணுமுணுத்தது.
அவன் மனக்கண்ணில் தேநீர்க் கடையில் 3 ருபாய் சில்லறைக்கு 2 ஒரு ரூபாய்க்கு மத்தியில் அவன் வைத்து கொடுத்த ஒரு சென்ட் நாணயம் மெல்ல விரிந்து பெரிதாகத் தெரிந்தது .
*****
உங்களுக்கு இந்தக் கதை பிடித்திருந்தால், அடுத்து வரும் கதைகள் பற்றி அறிய : Vetti Vaayan / வெட்டி வாயன்
என்ற முகநூல் பக்கத்தை பின்தொடரவும்
Nice story. Unexpected ending 👍👍👌👌👌. Twists and turns
ReplyDelete